என்.ஐ.டி.,யில் புதுவைக்கு கூடுதல் இடம் ஒதுக்க எதிர்பார்ப்பு
என்.ஐ.டி.,யில் புதுவைக்கு கூடுதல் இடம் ஒதுக்க எதிர்பார்ப்பு
UPDATED : ஆக 02, 2009 12:00 AM
ADDED : ஆக 02, 2009 11:47 AM
புதுச்சேரி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் என்.ஐ.டி., கல்வி நிறுவனங்களில், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மாணவர்களுக்கும் குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. 2009ம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டின்படி, புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு 38 இடங்களை ஒதுக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த 38 இடங்களும், பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்வேறு என்.ஐ.டி.,க்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்குமுன், புதுச்சேரி மாணவர்களுக்கான ஒதுக்கீடு 30 ஆக இருந்தது; தற்போது எட்டு இடங்கள் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், அருணாச்சல பிரதேச மாநில மாணவர்களுக்கு இந்தாண்டில் 53 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடந்தாண்டில் இந்த மாநிலத்துக்கு 36 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. தற்போது இந்த மாநிலத்துக்கு 17 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதாவது 64 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் பார்த்தால், புதுச்சேரி மாநிலத்துக்கும் அதே அளவு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், புதுச்சேரிக்கு 27 சதவீதம் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது.
அருணாச்சல பிரதேச மாநிலத்துக்கு இணையாக, புதுச்சேரிக்கான ஒதுக்கீட்டை அதிகரித்தால், மொத்த இடங்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரிக்கும். இதன்மூலம் அதிகமான மாணவர்கள் படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். நடப்பு ஆண்டிலேயே புதுச்சேரி மாநில மாணவர்களுக்கான ஒதுக்கீடு இடங்களை 49 ஆக அதிகரிக்க வேண்டும் என்பது தான், அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பு.
மேலும், திருச்சி என்.ஐ.டி.,யில் புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு கடந்த 1972ல் இரண்டு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அப்போது, திருச்சி என்.ஐ.டி., யின் மொத்த இடங்களின் எண்ணிக்கை 200 ஆக இருந்தது. தற்போது, திருச்சி என்.ஐ.டி.,யின் மொத்த இடங்களின் எண்ணிக்கை 920 ஆக அதிகரித்துள்ளது. இந்த அடிப்படையில் பார்த்தால், திருச்சி என்.ஐ.டி.,யில் மட்டும் புதுச்சேரி மாணவர்களுக்கு ஒன்பது இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.
நாடு முழுவதும் உள்ள என்.ஐ.டி.,க்களில் காலி இடங்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளதால், புதுச்சேரி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க, புதுச்சேரி எம்.பியும்., மத்திய அமைச்சருமான நாராயணசாமி முயற்சிக்க வேண்டுமென, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
