UPDATED : ஆக 02, 2009 12:00 AM
ADDED : ஆக 02, 2009 11:52 AM
தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாக 32 மாவட்ட நிர்வாகங்கள் இயங்கி வரும் போதும், தேர்வுத் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் அரியலூர், திருப்பூர் ஆகிய இரண்டு மாவட்டங்கள் குறித்து எவ்விதமான பதிவேடுகளையும் பராமரிப்பதில்லை.
அரசு உருவாக்கிய மாவட்டங்களுக்கு, கல்வித் துறை உரிய அங்கீகாரம் தர மறுப்பது ஏன் என்று, மாவட்ட மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து அரியலூர் மாவட்டமும், கோவை, ஈரோடு மாவட்டங்களில் இருந்து சில பகுதிகளை பிரித்து திருப்பூர் மாவட்டமும் உருவாக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் உருவாகி சில ஆண்டுகள் ஆகின்றன. திருப்பூர் மாவட்டம், கடந்தாண்டு அறிவிக்கப்பட்டு, முழு அளவில் இயங்கி வருகிறது. அரியலூர் மாவட்ட கலெக்டராக அனில் மேஷ்ராம், திருப்பூர் மாவட்ட கலெக்டராக சமயமூர்த்தி பணியாற்றி வருகின்றனர். அரசுத் துறைகளில், புதிய மாவட்டங்கள் குறித்த புள்ளி விவரங்களும் இடம்பெறுகின்றன.
ஆனால், பள்ளிக் கல்வித் துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் அரசு தேர்வுத்துறை, தொடக்க கல்வித்துறை போன்றவற்றில், இரண்டு மாவட்டங்கள் சார்ந்து எவ்விதமான பதிவேடுகளும் பராமரிப்பதில்லை. பள்ளி பொதுத்தேர்வுகளில், மாவட்ட வாரியான தேர்ச்சி சதவீதம், தேர்வுத் துறையால் தயாரிக்கப்படுகிறது. அதில், அரியலூர், திருப்பூர் மாவட்டங்கள் மட்டும் இடம்பெறுவதில்லை.
30 மாவட்டங்கள் சார்ந்த புள்ளி விவரங்கள் மட்டுமே தேர்வுத்துறையால் பராமரிக்கப்படுகிறது. எந்த பதிவேடுகளிலும், இரண்டு மாவட்டங்கள் குறித்த புள்ளி விவரங்களை பராமரிப்பதில்லை. இதேபோல், தொடக்க கல்வித் துறையிலும் இரண்டு மாவட்டங்கள் குறித்த பதிவேடுகள் பராமரிக்கப்படுவதில்லை.
சமீபத்தில், இடைநிலை ஆசிரியர் பணி நியமன கவுன்சிலிங் நடந்தது. இதற்காக, மாவட்ட வாரியாக கவுன்சிலிங் நடக்கும் மையங்களின் விவரம் வெளியிடப்பட்டன. அதில், திருப்பூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களின் பெயர் இடம் பெறவில்லை. பழைய மாவட்டங்களின் அடிப்படையிலேயே கவுன்சிலிங் நடந்தது.
தமிழக அரசு அதிகாரப் பூர்வமாக புதிய மாவட்டங்களை உருவாக்கி, அதற்கான எல்லைகளை வகுத்து, கலெக்டர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளையும் நியமித்து நிர்வாகம் செய்து வரும் நிலையில், தேர்வுத் துறையும், தொடக்கக் கல்வித் துறையும் உரிய அங்கீகாரம் தராமல், இன்னும் பழைய மாவட்டங்களின் அடிப்படையிலேயே நிர்வாகம் செய்து வருவது எந்த வகையில் நியாயம் என்று அம்மாவட்ட மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
