டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1: மனிதநேய பயிற்சி மையம் சாதனை
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1: மனிதநேய பயிற்சி மையம் சாதனை
UPDATED : ஆக 05, 2009 12:00 AM
ADDED : ஆக 05, 2009 11:40 AM
சென்னை: மனிதநேய அறக்கட்டளையின்கீழ் செயல்பட்டு வரும், சைதை துரைசாமியின் மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., இலவசப்பயிற்சி மையத்தில், பயிற்சி பெற்ற மாணவர்கள் டி.என்.பி. எஸ்.சி., குரூப் 1 மற்றும் யு.பி.எஸ்.சி., முதல்நிலைத் தேர்வுகளில் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதுகுறித்து, மையத்தின் இயக்குனர் வாவூசி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்திய குரூப்-1 மற்றும் யு.பி.எஸ்.சி., முதல்நிலைத் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், டி.என்.பி. எஸ்.சி., குரூப் 1 தேர்வில், எங்களது மையத்தில் பயிற்சி பெற்ற 170 மாணவர்களில் 64 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதேபோல யு.பி.எஸ்.சி., முதல் நிலைத்தேர்வில் எங்களிடம் பயிற்சி பெற்ற 220 மாணவர்களில் 95 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள், தங்குமிடம், உணவு, பாடப்புத்தகங்கள், மாதிரித் தேர்வுகள், யோகா பயிற்சி வகுப்புகள், போக்குவரத்து வசதி ஆகியவை அறக்கட்டளையால் இலவசமாக செய்து தரப்பட்டது.
இதே போன்று, சென்ற வாரம் வெளியான டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 எழுத்துத் தேர்வில், எங்களது மையத்தில் பயிற்சி பெற்ற 57 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றனர். ஐ.ஏ.எஸ்., முதல் நிலைத் தேர்வில் எங்களிடம் பயிற்சி பெற்ற 95 பேர் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
