எஸ்.எஸ்.எல்.சி., உடனடி தேர்வு: தேர்ச்சி வீதம் வெறும் 29!
எஸ்.எஸ்.எல்.சி., உடனடி தேர்வு: தேர்ச்சி வீதம் வெறும் 29!
UPDATED : ஆக 07, 2009 12:00 AM
ADDED : ஆக 07, 2009 11:14 AM
86 ஆயிரத்து 439 பேர் மீண்டும் தோல்வி அடைந்துள்ளனர். எஸ்.எஸ்.எல்.சி.,-மெட்ரிக்-ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓ.எஸ்.எல்.சி., உடனடித் தேர்வு முடிவுகள் ஆக. 6ம் தேதி வெளியிடப்பட்டன.
தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள: www.dge1.tn.nic.in , www.pallikalvi.in
எஸ்.எஸ்.எல்.சி., உடனடித் தேர்வில், ஒரு பாடத்தில் 53 ஆயிரத்து 250 பேர் தேர்வெழுதினர். இதில், 25 ஆயிரத்து 739 பேர் (48.3%) தேர்ச்சி பெற்றுள்ளனர். இரு பாடங்களில் 44 ஆயிரத்து 79 பேரும், மூன்று பாடங்களில் 24 ஆயிரத்து 536 பேரும் தேர்வெழுதினர். இவர்களில் முறையே, 8,086 (18.3%)பேர், 1,601 பேர் (6.5%)தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மொத்தத்தில், ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 865 பேர் தேர்வெழுதியதில், 35 ஆயிரத்து 426 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 86 ஆயிரத்து 439 பேர் மீண்டும் தோல்வியடைந்துள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 29. கடந்த ஆண்டுகளிலும் 30 சதவீதம் அளவிலேயே தேர்ச்சி இருந்துள்ளது. இந்த ஆண்டு அதைவிட குறைந்துள்ளது.
மெட்ரிக் தேர்வை 8,189 பேர் எழுதி, 3,338 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 40.7. ஆங்கிலோ இந்தியன் தேர்வை 211 பேர் எழுதியதில், 95 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். எஸ்.எஸ்.எல்.சி., தேர்வைப் போல், மெட்ரிக் உடனடித் தேர்வில், ஒரு பாடத்தில் 5,669 பேர் எழுதியதில் 2,974 பேர் தேர்ச்சி (52.4%) பெற்றுள்ளனர். இதே மாணவர்கள், இரண்டு, மூன்று பாடங்களில் அதிகளவில் தேர்ச்சி பெறவில்லை.
இரண்டு பாடங்களில் தேர்வு எழுதியோரில் 17.2 சதவீதம் பேரும், மூன்று பாடங்கள் எழுதியவர்களில் வெறும் 6.3 சதவீதம் பேரும் தான் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதிலிருந்து, ஒரு பாடத்தில் தோல்வி அடைபவர்கள் மட்டுமே, உடனடித் தேர்வில் அதிகளவில் தேர்ச்சி பெறுகின்றனர் என்பதும், இரண்டு, மூன்று பாடங்கள் எழுதுவோரில், 20 சதவீதம் பேர் கூட தேர்ச்சி பெறுவதில்லை என்பதும் வெளிப்பட் டுள்ளது.
இது குறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மூன்று பாடங்களுக்கு தேர்வு நடத்துவது மினி பொதுத்தேர்வு போல் இருக்கிறது. மூன்று பாடங்களையும் மீண்டும் படித்து தேர்வெழுத கால அவகாசம் கிடைப்பதில்லை. இந்த காரணங்களால் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தேர்வெழுதுபவர்கள் அதிகளவில் தோல்வி அடைகின்றனர்’ என்கின்றனர்.
வரும் ஆண்டில் இருந்து மூன்று பாடங்களுக்கு பதிலாக, ஒரு பாடத்தில் தோல்வி அடைபவர்களுக்கு மட்டும் உடனடித் தேர்வு நடத்தினால், மாணவர்களுடைய பணம் வீணடிப்பது தடுக்கப்படுவதோடு, நேர விரயமும் மிச்சமாகும். அதே நேரத்தில், தேர்வுத் துறையின் பணிப் பளுவும் குறையும்.
