அண்ணா பல்கலை துணைவேந்தர் அலுவலகம், வீட்டில் ரெய்டு
அண்ணா பல்கலை துணைவேந்தர் அலுவலகம், வீட்டில் ரெய்டு
UPDATED : ஆக 08, 2009 12:00 AM
ADDED : ஆக 08, 2009 12:10 PM
கோவை அண்ணா பல்கலை துணைவேந்தர் ராதாகிருஷ்ணன், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் ஆக. 7ம் தேதி துணைவேந்தர் அலுவலகம் மற்றும் அவரது வீட்டில் அதிரடி ‘ரெய்டு’ நடத்தினர்.
கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஜோதிபுரத்தில் கோவை அண்ணா பல்கலை செயல்பட்டு வருகிறது. பல்கலையின் துணைவேந்தராக ராதாகிருஷ்ணன் உள்ளார். இவர், தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த வக்கீல் சிவபாண்டி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது:
கோவை அண்ணா பல்கலை துணைவேந்தராக நியமிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன், சென்னை அண்ணா பல்கலையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றியவர். இவர், கடந்த 2007 ஆண்டு பிப்., 2ல் கோவை அண்ணா பல்கலை துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டார். அரசு விதியின்படி, பேராசிரியராக அதிக அனுபவம் பெற்றவர்கள் மட்டுமே துணைவேந்தராக நியமனம் செய்யப்படுவர். ஆனால், உதவிப் பேராசிரியராக பணியாற்றிய ராதாகிருஷ்ணன், கோவை அண்ணா பல்கலை துணைவேந்தராக நியமனம் செய்யப் பட்டார்.
இவர், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் புதிய இன்ஜினியரிங் கல்லூரிகள் துவங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின்படி, விண்ணப்பங்களை பெற்ற அவர், கோவையில் ‘பிரகார் பவுண்டேஷன்’ என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவினார். இதனுடன் இணைந்த, ‘ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்சர்’ என்ற கல்லூரியையும் கோவையில் நிறுவினார். இதன் நிர்வாக அறங்காவலர்களாக தன்னுடைய மனைவி அமிர்தசஞ்சீவி, மாமியார் கமலம் ஆகியோரை நியமனம் செய்தார். இந்த அறக்கட்டளையின் பெயரில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன.
துணைவேந்தரின் மனைவி, மாமியாருக்கு பரம்பரை சொத்துகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஆன்-லைன்’ தேர்வு முறையிலும், டெண்டர் கோருவதிலும் துணைவேந்தர் முறைகேடு செய்துள்ளார். இவ்வாறு, சிவபாண்டி மனுவில் கூறியிருந்தார்.
தனது புகார் மீது வழக்கு பதிவு செய்யும்படி, உத்தரவிட மனுவில் கோரியிருந்தார். இதன்படி, சென்னை ஐகோர்ட் ஐüலை 22க்குள் பதில் அளிக்கும்படி கோவை அண்ணா பல்கலை துணைவேந்தர், இணைவேந்தர், உயர்கல்வித்துறை செயலர், பல்கலை பதிவாளர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கும் நோட்டீஸ் அனுப்பியது.
இது தவிர, தனியார் விளம்பர நிறுவனத்துக்கு பல்கலை குறித்து விளம்பரம் கொடுக்கப்பட்டதிலும், பல்கலையில் ஆட்கள் நியமனம் செய்வது தொடர்பாகவும் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுதவிர, சிங்கப்பூரில் இருந்த திறன் குறைந்த சி.என்.சி., லேத் ஒன்றை ஒரு கோடி ரூபாய் செலவில் வாங்கியுள்ளதாகவும் துணைவேந்தர் மீது சரமாரியாக புகார் எழுந்துள்ளது.
இந்த புகார்களின் அடிப்படையில், பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கோவை அண்ணா பல்கலை வளாகத்தில் துணைவேந்தர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி தலைமையில் ‘ரெய்டு’ நடந்தது. கோவை சாய்பாபா காலனியில் உள்ள அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது. பல்கலைக்கு உட்பட்ட தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு முறைப்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளதா, அதற்கான விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா என லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தினர்.
மதியம் 2 மணிக்கு ஒரே நேரத்தில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரெய்டு நடத்தினர். கோவை சாய்பாபா காலனி, என்.எஸ்.ஆர்.ரோட்டில் உள்ள பிரகார் பவுண்டேஷன் அறக்கட்டளையில் நிர்வாகப் பொறுப்பில் துணைவேந்தரின் மனைவி மற்றும் மாமியார் உள்ளனர். இங்கு இரவு 8 மணி வரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.
சாய்பாபா காலனி பாலசுப்பிரமணியம் வீதியில் உள்ள அவருடைய வீட்டிலும் சோதனை நடந்தது. இங்கு, துணைவேந்தரின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் வசிக்கின்றனர். துணைவேந்தர் அலுவலகத்தில் நடந்த சோதனையில், ஐந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி தெரிவித்தார். இதுதொடர்பாக, துணைவேந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
