UPDATED : ஆக 08, 2009 12:00 AM
ADDED : ஆக 08, 2009 03:49 PM
சிறப்பாக எழுதப்பட்ட வசனம் என்பது மனதிற்குள் நினைப்பதை வெளிப்படுத்தும் கண்ணாடி போன்றது. பேசிக்கொண்டு நடிப்பது உண்மையாக இருக்க வேண்டும்.
ஆகையால், ஒரு திரைக்கதையில் ஒவ்வொரு பேச்சும், நடிப்பும் நன்றாக இருக்க வேண்டும். மும்பையில் உள்ள விஷ்லிங் வுட் இன்டர்நேஷனல் திரைக்கதை எழுத ஒரு ஆண்டு சான்றிதழ் படிப்பை வழங்குகிறது. இப்படிப்பு இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதன் முதல் செமஸ்டரில் மொத்தமுள்ள 35 மணி நேர வகுப்பில் படங்களை இயக்குதல், எடிட்டிங், திரைப்படக்கலை, ஒலி, நடிப்பு, தயாரிப்பு போன்றவற்றில் உள்ள அடிப்படை விஷயங்கள் கற்றுத்தரப்படுகின்றன.
முதல் செமஸ்டரிலேயே மாணவர்கள் 15 பக்கங்களுக்கு கதை எழுதும் திறன் பெறுகின்றனர். இரண்டாவது செமஸ்டர் தொடங்கும்போது மாணவர்கள் எழுதிய திரைக்கதையை திருத்தி சிறந்த முறையில் எழுத கற்றுத்தரப்படுகிறது. இதனால் மாணவர்கள் ஒரு முழு திரைக்கதையை சிறந்த முறையில் எழுதும் திறனை வளர்த்துக் கொள்கின்றனர்.
கவுரவ விரிவுரையாளர்களும் அவ்வப்போது வந்து இதில் பாடத்திட்டங்களை மாணவர்களுக்கு கற்பிக்கின்றனர். புனேயில் செயல்படும் பிலிம் அண்டு டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா இதில் ஒரு ஆண்டு முதுகலை சான்றிதழ் படிப்பை வழங்குகிறது. இதில் திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதுவது கற்றுத்தரப்படுகிறது. இப்படிப்பில் சேர நுழைவுத்தேர்வும், நேர்முகத்தேர்வும் நடத்தப்படும். இப்படிப்பை முடித்தவர்கள் கலைத்துறை தொடர்பான அறிவையும், சுயமாக திரைக்கதை எழுதும்
திறனையும் பெறுகின்றனர்.
இத்துறையை சேர்ந்தவர்கள் தொடக்கத்தில் ஊடகங்களிலும், நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனங்களிலும் தங்கள் வாழ்க்கையை தொடங்குகின்றனர். திரைக்கதை எழுதுபவர்களிடம் உதவியாளராக முதலில் பணிவாய்ப்புகள் அமையும். பின்னர் விருப்பத்திற்கேற்றவாறு வாழ்க்கைப்பாதையில் முன்னேற்றம் ஏற்படும். மேலும் உயர்ந்த பதவிகளுக்கும் செல்லலாம்.
தொடக்கநிலையிலேயே அதிக சம்பளத்தை எதிர்பார்க்க முடியாது. அவரவர் திறமையை பொறுத்து சம்பளம் வேறுபடும். சொந்தமாக திரைக்கதை எழுதி அதை விற்றால் 4 லட்சம் முதல் 8 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். அதே நேரத்தில் படத்தயாரிப்பு நிறுவனங்களில் பணிபுரிந்து திரைக்கதை எழுதிக்கொடுத்தால் ஆறு லட்சம் முதல் 8 லட்சம் வரை சம்பாதிக்கலாம். மேலும் வளர்ச்சிப்பாதையும் சிறப்பாக அமையும்.
இப்படிப்பிற்கான கட்டணம் 3 லட்சம் ரூபாய். ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இதில் சேர்ந்து படிக்கலாம்.
