பொதுப்பிரிவு இன்ஜி., கவுன்சிலிங் நிறைவு: 31,210 ‘சீட்’ காலி
பொதுப்பிரிவு இன்ஜி., கவுன்சிலிங் நிறைவு: 31,210 ‘சீட்’ காலி
UPDATED : ஆக 11, 2009 12:00 AM
ADDED : ஆக 11, 2009 10:52 AM
பொதுப்பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கவுன்சிலிங், ஜூலை 10ம் தேதி முதல் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வந்தது. இக்கவுன்சிலிங் ஆக. 10ம் தேதியுடன் முடிவடைந்தது.
மொத்தம் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 749 மாணவர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டனர். இதில், 39 ஆயிரத்து 657 பேர் கவுன்சிலிங்கிற்கு வரவில்லை. கவுன்சிலிங்கிற்கு வந்தவர்களில் 421 பேர் ‘இடம் வேண்டாம்’ என தெரிவித்தனர். ஏழு பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. பொதுப்பிரிவு கவுன்சிலிங்கின் முடிவில், 78 ஆயிரத்து 664 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழக துறைகள் மற்றும் பல்கலைக்கழக கல்லூரிகளில் 5,715 பேர், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 4,291 பேர், தனியார் கல்லூரிகளில் 68 ஆயிரத்து 658 பேருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கவுன்சிலிங்கில், கடைசியாக இடத்தைத் தேர்வு செய்த அஸ்வினி என்ற மாணவிக்கு, தொழில்நுட்பக் கல்வி கமிஷனர் ஜெயக்கொடி சேர்க்கை ஆணையை வழங்கினார்.
அவர் கூறுகையில், “பொறியியல் கவுன்சிலிங்கின் முடிவில் காலியாக உள்ள இடங்களை, தனியார் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டில் நிரப்பிக்கொள்ளலாம். இந்த மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 4ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்,” என்றார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறியதாவது:
இந்த ஆண்டு 92 புதிய கல்லூரிகள் உட்பட, மொத்தம் 440 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. பி.ஆர்க்., படிப்பு வழங்கும் ஆறு கல்லூரிகளையும் சேர்த்து மொத்தம் 446 கல்லூரிகள் உள்ளன. இதில், மொத்தம் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 819 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 82 ஆயிரத்து 496 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், 51 ஆயிரத்து 351 பேர் ஆண்கள்; 31 ஆயிரத்து 145 பேர் பெண்கள்.
பொதுப்பிரிவில் மட்டும் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 594 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 78 ஆயிரத்து 664 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், 47 ஆயிரத்து 808 பேர் ஆண்கள், 30 ஆயிரத்து 856 பேர் பெண்கள். அரசு ஒதுக்கீட்டில், 26 கல்லூரிகளில் 100 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன; 32 கல்லூரிகளில் 20 சதவீதத்திற்கும் குறைவான இடங்கள் நிரம்பியுள்ளன. ஆறு கல்லூரிகளில் 10 சதவீதத்திற்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன. இவ்வாறு மன்னர் ஜவகர் கூறினார்.
பிளஸ் 2 உடனடித் தேர்வெழுதி, பொறியியல் படிப்பில் சேர தகுதி பெற்றவர்களுக்கான பொறியியல் துணை கவுன்சிலிங் ஆக. 11ம் தேதி (இன்று) நடக்கிறது. இதற்கு 880 பேர் அழைக்கப்படவுள்ளனர்.
அருந்ததியினர் பிரிவில் காலியாக உள்ள 2,279 இடங்கள், விருப்பமுள்ள எஸ்.சி., மாணவர்களுக்கு ஒதுக்கப்படவுள்ளன. இதற்கான கவுன்சிலிங் ஆக. 12ம் தேதி நடக்கிறது.
