பள்ளி, அரசு விழாக்களில் மாணவர்களின் சாகச நிகழ்ச்சிகளுக்கு தடை
பள்ளி, அரசு விழாக்களில் மாணவர்களின் சாகச நிகழ்ச்சிகளுக்கு தடை
UPDATED : ஆக 11, 2009 12:00 AM
ADDED : ஆக 11, 2009 12:05 PM
காரைக்குடி: பஸ், வேனை பல்லில் கட்டி இழுப்பது, மாணவர்களின் கைகளில் வாகனங்களை ஏற்றுவது போன்ற ‘சாகச’ நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் விளையாட்டு, ஆண்டு விழாக்களின் போது மாணவர்கள் சாகச நிகழ்ச்சிகளை நடத்துவது பிரபலமாகி வருகிறது. வயது தகுதி இல்லாத மாணவர்கள் வாகனங்களை ஓட்டுவது, வாகனத்தை பல்லால் கடித்து இழுத்தல், ஆணிகள் நிறைந்த பலகையில் படுக்கவைத்து மாணவர்கள் மீது டூவீலர்களை ஓட்டுவது, கையில் வாகனங்களை ஏற்றுவது உள்ளிட்டவை சாதனை என்ற பெயரில் நடத்தப்படுகின்றன.
மாணவர்களின் உயிருக்கும், உறுப்புகளுக்கும் உலை வைக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை பள்ளிகளில் நடத்த கல்வித் துறை தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தடை: இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித்துறை இயக்குனர் பெருமாள்சாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “கடந்த மாதம் விழுப்புரம் பள்ளி ஒன்றில் மாணவர்கள் சாகச நிகழ்ச்சி செய்தபோது விபத்து ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு அரசு, உதவி பெறும் பள்ளி, மெட்ரிக் பள்ளிகளில் மாணவர்களின் உயிர், உடலுக்கு ஆபத்து விளைவிக்கும் சாகச நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தன்று கலெக்டர் அலுவலகங்களில் மாணவர்களின் கலை, சாகச நிகழ்ச்சிகள் நடக்கும். கல்வித்துறையின் உத்தரவை தொடர்ந்து, அன்றும் சாகச நிகழ்ச்சிகள் இருக்காது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
