தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘வாழ்வில் பெரிய லட்சியம் வேண்டும்’: கலாம்

‘வாழ்வில் பெரிய லட்சியம் வேண்டும்’: கலாம்

‘வாழ்வில் பெரிய லட்சியம் வேண்டும்’: கலாம்


UPDATED : ஆக 14, 2009 12:00 AM

ADDED : ஆக 14, 2009 12:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 14, 2009 12:00 AM ADDED : ஆக 14, 2009 12:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு


கோவை:
“ஒவ்வொருவருக்கும் வாழ்வில் பெரிய லட்சியம் வேண்டும். பெரிய செயல்களை புரிய இந்த லட்சியம்தான் துணை நிற்கும்,” என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார்.
கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் கடந்த ஆண்டு பட்டப்படிப்பில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. மாணவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் விருது வழங்கி பாராட்டினார். ஒவ்வொருவரும் வீட்டில் நூலகம் அமைத்து அறிவை மேம்படுத்த வேண்டும் என உறுதி மொழி ஏற்க செய்தார்.
‘என் வீட்டில் நூலகம் அமைப்பேன். ஏற்கனவே உள்ள நூலகத்தில் புத்தக எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வேன். தினமும் ஒரு மணி நேரம் குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவேன். எங்கள் வீட்டில் புத்தகங்கள்தான் பரம்பரை சொத்து; அறிவு களஞ்சியம். புத்தகம் படிக்கும் முயற்சியால் நம் நாட்டில் அறிவு புரட்சி ஏற்படுவதற்கான ஆதாரத்தை உருவாக்குவேன்,’ என்ற அந்த உறுதி மொழியை பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்களை ஏற்க செய்தார்.
அதன் பின் கலாம் பேசியதாவது:
மனக்கட்டுப்பாடு, ஒழுக்கம், புதிய விஷயங்களை உருவாக்குதல் உள்ளிட்ட அம்சங்களில் ஒவ்வொரு மாணவரும் சிறந்து விளங்க வேண்டும். எதிர்கால தகவல் தொடர்பு வயர்லெஸ் முறையை சார்ந்து இருக்கும். 2029ம் ஆண்டில் மனித மூளையை விட ஒரு கம்ப்யூட்டரின் திறன் ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கும்.
‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்ற வள்ளுவரின் குறளுக்கேற்ப, ஒவ்வொருவருக்கும் வாழ்வில் பெரிய லட்சியம் வேண்டும். பெரிய செயல்களை புரிய இந்த லட்சியம்தான் துணை நிற்கும். செய்யும் பணியில் நேர்மை இருந்தால் வெற்றி உறுதி. பல பிரச்னைகளுக்கு சுயநலம்தான் காரணம் என்பதால் அதை களைய வேண்டும். இளைஞர்கள் சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்களிடம் ஆசிரியர்கள் தன்னம்பிக்கையை விதைக்க வேண்டும். இந்த தகுதிகளை கொண்ட மாணவர்களால் நாட்டை மாற்றியமைக்க முடியும்.
2020ல் இந்தியா வளர்ந்த நாடாக மாற, கிராமத்துக்கும் நகரத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைக்க வேண்டும். பொருளாதார, சமூக இடைவெளி இருக்க கூடாது. அனைவருக்கும் சுத்தமான தண்ணீர், எரிசக்தி கிடைக்க வேண்டும்; விவசாயம், தொழில், சேவை துறை வளர வேண்டும்; பண்பாட்டுக் கல்வி கிடைக்க வேண்டும்; தரமான மருத்துவ வசதி கிடைக்க வேண்டும்.
மாணவர்களுக்கு தைரியம் வேண்டும். வித்தியாசமாக சிந்திப்பதில், நாட்டின் உள் பகுதிகளுக்கு பயணம் செய்வதில், அசாத்தியமானதை சாத்தியமாக்குவதில், பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் தைரியம் வேண்டும். ஊழல் அகன்று, வறுமை, கல்லாமை ஒழிய வேண்டும். அனைத்து குழந்தைகளும் பாதுகாப்பாக உணர வேண்டும்.
20 வயது வரை அனைவரும் கட்டாயம் கல்வி கற்க வேண்டும். படிப்பை முடிப்பவர்கள் வேலை தேடுபவர்களாக இருப்பதை விட வேலை தரும் தொழில் முனைவோர் ஆக மாற வேண்டும். தொழில்நுட்பத்தில் சுயசார்பு தேவை. இவையனைத்தும் பெற்றால் 2020ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறி விடும். இவ்வாறு, அப்துல் கலாம் பேசினார்.
இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் சேர்மன் கண்ணையன், செயலாளர் சரஸ்வதி, முதல்வர் பாலுசாமி மற்றும் மாணவர்கள் திரளாக விழாவில் பங்கேற்றனர்.
கலாமை வரவேற்ற தேசத் தலைவர்கள்
கலாமை வரவேற்க மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், நேரு, கலாம் வேடமிட்ட குழந்தைகள் காலை முதலே காத்திருந்தனர். மேடையேறிய கலாமுக்கு கதர் ஆடை, ரோஜாப்பூ பரிசளித்தனர். ஊன்றுகோலுடன் குனிந்தவாறு தள்ளாடியபடி வந்த காந்தியை கண்ட கலாம், நிமிர்ந்து நடக்குமாறு கூறினார். மிடுக்காக நடந்து வந்து சல்யூட் அடித்த சுபாஷ் சந்திரபோசுக்கு கலாம் பதிலுக்கு சல்யூட் அடித்தார். குழந்தை தலைவர்களை தட்டிக் கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us