‘அண்ணாதுரையின் புத்தகங்களை மாணவர்கள் படிக்க வேண்டும்’
‘அண்ணாதுரையின் புத்தகங்களை மாணவர்கள் படிக்க வேண்டும்’
UPDATED : அக் 07, 2009 12:00 AM
ADDED : அக் 07, 2009 05:58 PM
கோவை: பாரதியார் பல்கலையில் அண்ணாதுரை நூற்றாண்டு நிறைவு விழா நடந்தது.
விழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை துணைவேந்தர் சபாபதி மோகன், 90 விதமான மலர்களின் பெயரை கூறி மாணவர்களை வாழ்த்தினார்.
விழாவில் அவர் பேசுகையில், “எழுத்தும் பேச்சும் சமுதாயத்தில் தலைகீழ் மாற்றத்தை கொண்டு வரும் என்பதை உணர்ந்து, தனது பேனா மற்றும் நாக்கு ஆகிய இரண்டு ஆயுதங்களால் புரட்சிகரமான பெரிய மாற்றங்களை கொண்டு வந்தவர் அண்ணாதுரை. தமிழ் வெண் பொங்கல் என்றால் ஆங்கிலம் அதில் உள்ள முந்திரி என்பதை தமிழக மக்களுக்கு உணர்த்தியவர் அண்ணாதுரை.
கைகட்டி வாழ்ந்த சமுதாயத்தினரை ‘டை’ கட்ட வைத்தவர் அண்ணாதுரை. அவரது கொள்கைளை எளிதில் மறந்து விட முடியாது. அவரது புத்தகங்களை மாணவர்கள் வாங்கிப் படித்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். சமுதாய வளர்ச்சிக்கான அவரது கொள்கைகளை பின்பற்ற வேண்டும்” என்றார்.
தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி பேசுகையில், “வட மாநிலம் மற்றும் ஆரிய சமுதாயத்தினரின் ஆதிக்கம் காரணமாக, தமிழ் சமுதாயம் கலப்பு சமுதாயமாக மாறியது; தனித்தன்மையை இழந்தது. இந்த நிலையை மாற்ற பல தமிழ் அறிஞர்கள் முயன்றும் முடியவில்லை.
அண்ணாதுரை அந்த மாற்றத்தை கொண்டு வந்தார். ஒரு சிறந்த சீடரால்தான் குருவின் புகழ் பெருகும். பெரியாரின் கருத்துக்களை அண்ணாதுரை பின்பற்றி செயல்படுத்தினார். அண்ணாதுரையின் கொள்கைகளை தமிழக முதல்வர் கருணாநிதி பின்பற்றி வருகிறார்,” என்றார்.
அண்ணாதுரை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட எழுத்து, பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு, விழாவில் காசோலைகள் பரிசு வழங்கப்பட்டன. பாரதியார் பல்கலை பதிவாளர் திருமால்வளவன், பேராசிரியர் தனிக்கொடி, பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் திரளாக பங்கேற்றனர்.
‘பாரதியார் பல்கலையில் உலக தமிழ் மாநாடு’
பாரதியார் பல்கலையில் உலக தமிழ் மாநாட்டை நடத்த வேண்டும் என, உள்ளூர் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியிடம் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் கோரிக்கை விடுத்தார்.
விழாவில் அவர் பேசுகையில், “கோவையில் உலக தமிழ் மாநாடு நடத்த அரசு முடிவு செய்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. முண்டாசு கவிஞன் பாரதியின் பெயரில் இயங்கி வரும் பாரதியார் பல்கலை வளாகத்தில் மாநாட்டை நடத்த அரசு முன்வர வேண்டும். மாநாட்டை சிறப்பாக நடத்த இங்குள்ள அறிஞர்களும் மாணவர்களும் துணை நிற்பார்கள்,” என்றார்.
