கல்வி கொள்கையை தடுத்திட வேண்டாம்: தமிழக பா.ஜ., தலைவர்
கல்வி கொள்கையை தடுத்திட வேண்டாம்: தமிழக பா.ஜ., தலைவர்
UPDATED : ஆக 05, 2020 12:00 AM
ADDED : ஆக 05, 2020 12:09 PM
சென்னை;
புதிய கல்வி கொள்கையை, மொழி குறித்து மட்டும் பேசி, தடுத்துவிட வேண்டாம் என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
புதிய கல்வி கொள்கை, ஆரம்ப பள்ளி முதல் உயர் கல்வி வரை, உலகத் தரத்திலான கல்வியை, மாணவர்களுக்கு வழங்க உள்ளது. இதனால், கல்வி துறையின் அனைத்து பிரிவுகளும் மேம்படும். தாய்மொழி கல்வி கட்டாயமாவதை, அனைத்து தரப்பு மக்களும் வரவேற்றுள்ளனர். புதிய கல்வி கொள்கை தமிழகத்திற்கு மட்டுமானதல்ல; நாடு முழுமைக்குமானது. ஹிந்தி, சமஸ்கிருதம் கட்டாயம் என, எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
கல்வி கற்க, மகிழ்வான, உற்சாகமான சூழல் உருவாக்கப்பட்டுள்ள தால், மாணவர்கள் கூடுதல் மொழி கற்பதில் ஆர்வம் காட்டுவர். தமிழகத்தில், சி.பி.எஸ்.சி., - மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஆயிரக்கணக்கில் உள்ளன.இப்பள்ளிகளில், பல்வேறு மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. கூடுதலாக ஒரு மொழியை கற்கும் வாய்ப்பை, அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் இழக்கின்றனர்.
ஹிந்தியோ, மற்றொரு இந்திய மொழியோ, கற்க விரும்பும் மாணவர்கள் ஆர்வத்திற்கும், பெற்றோர் விருப்பத்திற்கும், நாம் தான் இடையூறாக இருக்கிறோம்.இந்திய மாணவர்களின், இளைஞர்களின் எதிர்கால வளர்ச்சி, உலக அளவில் அவர்களின் போட்டித் திறன் ஆகியவற்றை அதிகரிக்க செய்யும், புதிய கல்வி கொள்கையை, மொழி குறித்து மட்டும் பேசி, தடுத்துவிட வேண்டாம். கூடுதலாக ஒரு மொழியை கற்க, மாணவர்கள் தயாராக உள்ளனர்; அவர்களை தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு, முருகன் கூறியுள்ளார்.
