UPDATED : ஆக 06, 2020 12:00 AM
ADDED : ஆக 06, 2020 07:48 PM
சென்னை:
இரு மொழி கல்விக் கொள்கையில் படித்த மாணவர்கள், உரிய வேலை வாய்ப்பின்றி தவிப்பதை, புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கும், அரசியல் கட்சிகள் உணர வேண்டும் என, தமிழ் புரட்சி களம் அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
சென்னையை தலைமையிடமாக கொண்டுள்ள, தமிழ் புரட்சி களம் அமைப்பு, மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட, தேசிய கல்விக் கொள்கையை வரவேற்றுள்ளது.
அந்த அமைப்பு, தன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முதல்வர் இ.பி.எஸ்., இருமொழி கொள்கையில் உறுதியாக இருப்போம் என்கிறார். மற்ற தலைவர்களும், தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கின்றனர். இளம் வயதில் கற்கும் கல்வி அறிவை, அனுபவத்தை தடுப்பவர்கள், மாணவர்களின் நலன் நாடுபவர்களாக இருக்க முடியாது. அரசியல் கட்சிகளுக்கு, 2021 தேர்தல் மட்டுமே, இலக்காக உள்ளது.
அண்டை மாநில மொழி தெரியாத தமிழக பட்டதாரி இளைஞர்களால், தொழில் துறைகளில் வெற்றி பெற முடிவதில்லை. இங்கு, இருமொழி கல்விக் கொள்கையில் படித்த மாணவர்களில், 95 சதவீதம் பேர், உரிய வேலை வாய்ப்பின்றி உள்ளனர். தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பவர்களுக்கான தீர்ப்பு, 2021 சட்டசபை தேர்தலில் எழுதப்படும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
