ஆசிரியர் பணிக்கு சான்றிதழ்களை பெறக் கூடாது: யு.ஜி.சி., எச்சரிக்கை
ஆசிரியர் பணிக்கு சான்றிதழ்களை பெறக் கூடாது: யு.ஜி.சி., எச்சரிக்கை
UPDATED : ஆக 20, 2020 12:00 AM
ADDED : ஆக 20, 2020 06:48 AM
புதுடில்லி;
ஆசிரியர்களை பணியில் அமர்த்தும்போது, அவர்களுடைய கல்விச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை வாங்கி வைக்கக் கூடாது என, பல்கலைகள், கல்லுாரிகளுக்கு, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
உயர்கல்வி கட்டுப்பாட்டு அமைப்பான, யு.ஜி.சி., யின் செயலர், ரஜ்னீஷ் ஜெயின் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆசிரியர்களை வேலைக்கு எடுக்கும்போது, பல்கலைகள், கல்லுாரிகள், ஒப்பந்தம் செய்து கொள்கின்றன. மேலும், அவர்களுடைய கல்விச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவற்றை வாங்கி வைத்துக் கொள்கின்றன. பணியில் இருந்து விலகிய பிறகு, தங்களுடைய சான்றிதழ்களை பெற முடியாமல் பலர் திணறுகின்றனர்.
மேலும், கிடைக்கும் நல்ல வேலைவாய்ப்பை இழக்க வேண்டிய நிலை சிலருக்கு உருவாகிறது. இது தொடர்பாக, பல புகார்கள் வந்துள்ளன. பணியில் சேர்க்கும்போது, கல்விச்சான்றிதழ் உள்ளிட்டவற்றை பல்கலைகள், கல்லுாரிகள் வாங்கக் கூடாது. பணி தொடர்பான நிபந்தனைகள், விதிகளை, பணி நியமன ஒப்பந்தத்தில் விளக்கமாக தெரிவிக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்தும், ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலும், இதுபோன்ற ஒரு எச்சரிக்கையை, கடந்தாண்டு வெளியிட்டிருந்தது.
