UPDATED : அக் 24, 2009 12:00 AM
ADDED : அக் 24, 2009 05:34 PM
மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் நோக்கமே சிறப்பான நேரடிக் கல்வியைப் பெறுவதற்குத் தான். ஆனால் வகுப்பறைகளை மட்டுமே நம்பித் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. பள்ளிப் படிப்புடன் இவர்கள் தனியார் சிறப்புப் பயிற்சி (டியூசன்) பெறுவதே தங்களது வெற்றிக்கான அடிப்படை என்று நம்புகின்றனர்.
என்.சி.இ.ஆர்.டி., சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வின் படி 80 முதல் 93 சதவீத மாணவர்கள் தனியார் சிறப்புப் படிப்புகளைப் படிப்பதாகத் தெரியவந்துள்ளது. 2001ம் ஆண்டில் இத்தகைய ‘டியூசன்களை’ அரசுப் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் மேற்கொள்ளக் கூடாது என்று கூறப்பட்டது. ஆனாலும் இது ஏட்டளவிலேயே உள்ளது.
8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் 80 சதவீதத்தினர் ‘டியூசன்களுக்கு’ செல்கின்றனர். பிளஸ் 2 படிக்கும் மாணவர்களில் 93 சதவீதத்தினர் தனியார் ‘டியூசன்களில்’ படிக்கின்றனர் என்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. இது மாநிலக் கல்வித் துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அரசு மற்றும் அரசு நிதி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தனியாக ‘டியூசன்’ வகுப்புகளை நடத்தக்கூடாது என்ற சட்டம் நடைமுறையில் உள்ள நிலையிலும் இது போன்ற நிலை இருப்பதால் கடுமையான சட்டங்களை ஏன் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று கல்வித் துறை யோசனையில் உள்ளது.
ஆசிரியர்களைப் பொறுத்த மட்டில் பள்ளிகளில் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததாலும் குறைவான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் பணியாற்றுவதாலும் தான் இந்த நிலை ஏற்பட்டிருப்பதாகக் கருதுகின்றனர். ஆசிரியர்கள் இது குறித்த தங்களது கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும் என்று கல்வித் துறை கூறியுள்ளது.
