UPDATED : ஆக 31, 2020 12:00 AM
ADDED : ஆக 31, 2020 08:24 AM
தமிழகத்தில், சென்னை கன்னிமாரா பொது நுாலகம் முதல், கிராம நுாலகங்கள் வரை, மொத்தம், 4,638 நுாலகங்கள் உள்ளன.இவை அனைத்தும், கொரோனா தொற்று பரவல் காரணமாக, மார்ச் மாதத்தில் இருந்து மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் நலன் கருதி, நுாலகங்களை திறக்கும்படி, பல்வேறு அமைப்புகள், அரசுக்கு கோரிக்கை விடுத்தன.
பகுதி நேர நுாலகம் தவிர, மற்ற நுாலகங்களை, செப்., 1 முதல் திறக்க அனுமதிக்கும்படி, பொது நுாலக இயக்குனரும், அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.அதை ஏற்று, நாளை முதல் நுாலகங்களை திறக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கன்னிமாரா பொது நுாலகம், அண்ணா நுாற்றாண்டு நுாலகம், மாவட்ட மைய நுாலகம், முழு நேர கிளை நுாலகம் ஆகியவற்றில், நுால் கடன் பிரிவு, நுால் குறிப்பெடுப்பு பிரிவு, வாசிப்பு பிரிவு ஆகியவை செயல்படும்.
கிளை நுாலகம் மற்றும் கிராம நுாலகங்களில், நுால் கடன் பிரிவு மட்டும் செயல்படும். இந்த நுாலகங்கள், பணி நாட்களில், வழக்கமான பணி நேரங்களில் செயல்படும்.மற்ற நுாலகங்கள், பணி நாட்களில், காலை, 8:00 மணி முதல், பகல், 2:00 மணி வரை செயல்படும் என, தமிழக அரசின் தலைமைச் செயலர் சண்முகம் வெளியிட்டுள்ள, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள நுாலகங்கள் திறக்கப்படாது. குழு விவாதம், நுாலகங்களில் அனுமதிக்கப்படாது.
மேலும், 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர், கர்ப்பிணிகள், 15 வயதிற்குட்பட்ட, சிறுவர் - சிறுமியரை, நுாலகங்களுக்குள் அனுமதிக்கக் கூடாது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்க, மொத்த இருக்கையில், 50 சதவீத இருக்கையில் மட்டும், வாசகர்களை அனுமதிக்க வேண்டும்.நுாலகத்திற்கு வருவோர், நேரடியாக புத்தகங்களை எடுக்க அனுமதிக்கக் கூடாது. கைகளை சுத்தம் செய்த பிறகே, உள்ளே அனுமதிக்க வேண்டும்.
நுாலக ஊழியர்கள் மற்றும் நுாலகத்திற்கு வருவோரின், உடல் வெப்பநிலையை பரிசோதித்த பிறகே, உள்ளே அனுமதிக்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகளையும், அரசு வெளியிட்டுள்ளது.
