UPDATED : செப் 06, 2020 12:00 AM
ADDED : செப் 06, 2020 07:48 AM
சென்னை:
தமிழகத்தில், வரும், 14ம் தேதி பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படும் என, தமிழக முதல்வர் அறிவித்துள்ளதாக தகவல்கள் பரவின. அதுபோன்ற எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என, அரசு தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு, ஊரடங்கில் அனைத்து விதமான தளர்வுகளை அறிவித்தாலும், பள்ளி, கல்லுாரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை திறக்க, தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திரையரங்குகளை திறக்கவும், அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில், முதல்வர் வெளியிட்ட அறிக்கை போல், தமிழக அரசு முத்திரையுடன், சமூக வலைதளங்களில் சிலர், அறிக்கை ஒன்றை பரப்பினர். அதில், &'வரும், 14ம் தேதி, பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படும். மாணவர்கள், ஆசிரியர்கள், முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். திரையரங்குகள், அக்., 1ல் திறக்கப்படும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்&' என, முதல்வர் குறிப்பிட்டதுபோல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
&'இது தவறான தகவல். அரசு தரப்பில், அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை&' என, அதிகாரிகள் தெளிவுப்படுத்தினர்.
அரசு முத்திரையுடன், தவறான தகவலை பரப்பியவர்கள் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
