UPDATED : செப் 11, 2020 12:00 AM
ADDED : செப் 11, 2020 05:54 PM
மதுரை:
மின்வாரிய பணியில் தொடர டி.என்.பி.எஸ்.சி.,யின் தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற அத்தியாவசிய நிபந்தனையில் எவ்வித சமரசமும் செய்ய முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
பெரியகுளம் கள்ளிப்பட்டி ஜெய்குமார். சின்னமனுார் மின்வாரியத்தில் 2018 ல் இளநிலை உதவியாளராக சேர்ந்தார். இவர் பள்ளிக் கல்வியை தமிழ் வழியில் படிக்கவில்லை. விதிகள்படி பணியில்சேர்ந்ததிலிருந்து 2 ஆண்டுக்குள் டி.என்.பி.எஸ்.சி.,யின் தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. அவர் தேர்ச்சி பெறாததால், பணியிலிருந்து மின்வாரியம் விடுவித்தது. அதை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஜெய்குமார் மனு செய்தார்.
நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் உத்தரவு:
மனுதாரரின் தாய்மொழி தமிழ். தமிழ் பேச மட்டுமின்றி எழுத, படிக்கத் தெரியவேண்டும்.
தமிழகத்தில் தமிழ் அலுவல் மொழி. அரசின் அனைத்து தகவல் தொடர்புகளும் தமிழில் நடைபெறுகிறது. அந்நடைமுறை மின்வாரியத்தில் உள்ளது. பணியில் தொடர தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற தகுதியை பூர்த்தி செய்வதில் மனுதாரர் ஆர்வமின்றி, அலட்சியமாக இருந்துள்ளார். திடீரென பணியிலிருந்து விடுவித்தால் அவரது எதிர்காலம் பாதிக்கும்.
தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற அத்தியாவசிய நிபந்தனையில் எவ்வித சமரசமும் செய்ய முடியாது. மனுதாரருக்கு மேலும் ஒரு வாய்ப்பாக டி.என்.பி.எஸ்.சி.,யின் அடுத்த மொழித் தேர்வில்பங்கேற்க வேண்டும். அதில் தோல்வியடைந்தால், பணி நீக்கம் செய்யலாம். டி.என்.பி.எஸ்.சி.,யின் அடுத்த மொழித்தேர்வின் முடிவு வெளியாகும்வரை வரை மின்வாரியம் பரிசீலித்து மனுதாரருக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்றார்.
