UPDATED : அக் 28, 2009 12:00 AM
ADDED : அக் 28, 2009 12:52 PM
பெங்களூரிலிருந்து அனுப்பிய, இமெயில் கடிதம்: ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எம்., நுழைவுத் தேர்வு விதிமுறைகளில், அரசு தலையிடாமல் இருப்பது தான் நல்லது. ஏனென்றால், பொதுவாக இந்த இரண்டு கல்வி நிறுவனங்களில் இருந்து பயின்று வெளி வரும் மாணவர்கள் தான், நம் நாட்டின் மேம்பட்ட கல்வித்தரத்தை, உலக அரங்கில் பறை சாற்றுகின்றனர்.
தற்போது வரையப்பட்டுள்ள புதிய கல்விக்கு வழி வகுக்கும் என்ற நோக்கத்தோடு இயற்றப்பட்டுள்ளதாக, கபில் சிபல் கூறுகிறார். ஆனால், பிளஸ் 2 பாடத் திட்டத்தின் இறுதித் தேர்வில், பெரும்பாலும், முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினாக்களே, மீண்டும், மீண்டும் கேட்கப்படுகின்றன என்பது பொதுவான கொள்கை. மேலும், இது அனேகமாக, எல்லா மாநில அரசு கல்வித் திட்டத்திற்கும் பொருந்தும். அதே சமயம், நாட்டின் பெரும்பாலான மாநில அரசு கல்வி திட்டத்திற்கும், சி.பி.எஸ்.இ., கல்வி திட்டத்திற்கும் இடையே, சமச்சீர் கல்வி இல்லை என்பது அனைவரும் அறிந்ததே!
சி.பி.எஸ்.இ., திட்டத்தில் பயின்று, 85 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவனின் பகுப்பாயும் திறன், தமிழக மாநில அரசு கல்வி திட்டத்தில் பயின்று, 95 சதவீதம் மதிப்பெண் பெற்ற ஒரு மாணவனின் பகுப்பாயும் திறனை விட கூடுதலாகவே இருக்கும்; ஒப்பிட முடியாது. மேலும், தமிழக மாநில அரசு கல்வி திட்டத்தின் கீழ், இறுதி தேர்வுக்கான வினாக்கள், பாடத் புத்தகத்தின் பயிற்சிப் பகுதியிலிருந்தே கேட்கப்படுகின்றன. எனவே, இந்த மாதிரியான கல்வி சார்ந்த நுழைவு தேர்வுகளில், தன்னுடைய தலையை நுழைப்பதை விட்டுவிட்டு, கல்வி மேம்பாட்டின் ஆணிவேராக விளங்கும் பிரச்னைகளான, அனைவருக்கும் கல்வி, நாட்டில் 100 சதவீத கல்வி போன்றவற்றை தீர்த்து வைப்பதில், கபில் சிபல் கவனம் செலுத்தலாம்.
