அண்ணா பல்கலை. பெயரில் அரசியல்: அந்தஸ்தை கெடுக்கும் கட்சிகள்
அண்ணா பல்கலை. பெயரில் அரசியல்: அந்தஸ்தை கெடுக்கும் கட்சிகள்
UPDATED : அக் 15, 2020 12:00 AM
ADDED : அக் 15, 2020 08:37 AM
சென்னை:
அண்ணா பல்கலையின் நிர்வாக விவகாரங்களில், சில கட்சிகள் அரசியல் செய்வதால், பல்கலையின் பெருமைக்கு சர்வதேச அளவில் பாதிப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
இன்ஜினியரிங் கல்வியில் முன்னணியில் உள்ள, அண்ணா பல்கலையின் பல்வேறு ஆராய்ச்சிகளும், புதிய கண்டுபிடிப்புகளும், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளன. அண்ணா பல்கலையில் படிக்கும் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு, மற்ற கல்வி நிறுவனங்களை விட, அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன.வெளிநாடுகளிலும் அண்ணா பல்கலையின் சான்றிதழ்களுக்கு, தனி மதிப்பு உள்ளது. உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,க்களில் கூட, பல படிப்புகளுக்கு, மத்திய அரசின், என்.பி.ஏ., அனுமதி இல்லை. ஆனால், அண்ணா பல்கலையில், என்.பி.ஏ., என்ற, தேசிய அங்கீகார அமைப்பின் அனுமதி பெற்றுத்தான், பெரும்பாலான படிப்புகள் நடத்தப்படுகின்றன.
சீர்மிகு அந்தஸ்து
இந்நிலையில், அண்ணா பல்கலையின் அந்தஸ்தை உயர்த்தும் வகையில், மத்திய அரசின் சீர்மிகு பல்கலை என்ற, ஐ.ஓ.இ., அந்தஸ்து பெற, மூன்று ஆண்டுகளுக்கு முன், அண்ணா பல்கலை நிர்வாகமும், தமிழக உயர் கல்வி துறையும் இணைந்து, முயற்சி மேற்கொண்டன. இந்த அந்தஸ்தை வழங்க, மத்திய அரசும் ஒப்புதல் அளித்தது. மேலும், ஐ.ஓ.இ., அந்தஸ்து பெறும் போது, மத்திய அரசு வழங்கும் நிதியுடன், அதே அளவுக்கு, தமிழக அரசின் நிதியையும், &'டிபாசிட்&' செய்ய வேண்டும். பல்கலையின் நிர்வாகத்திலோ, மாணவர் சேர்க்கை இடஒதுக்கீடு விதிகளிலோ, எந்த மாற்றமும் இல்லை என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி சிக்கல் காரணமா?
ஆனால், தமிழக அரசிடம் நிதி பற்றாக்குறை உள்ளதால், மத்திய அரசு கூறும், 1,500 கோடி ரூபாய் நிதியை, அண்ணா பல்கலைக்கு ஒதுக்க முடியாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால், ஐ.ஓ.இ., அந்தஸ்தை பெறுவதில், தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை. இதை சிலர், இட ஒதுக்கீடு பிரச்னையாக கிளறி விட்டுள்ளதாக கூறப்படுகிறது.தமிழகத்தில் செயல்படும், வி.ஐ.டி., பல்கலை, அமிர்தா பல்கலை போன்றவையும், மத்திய அரசின் சென்னை ஐ.ஐ.டி.,யும், இந்த அந்தஸ்தை பெற்றுள்ளன.சென்னை ஐ.ஐ.டி.,யில், சிறப்பு அந்தஸ்து பெற்ற பின்னரும், ஏற்கனவே பின்பற்றிய, மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிகளின்படியே, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கு மட்டும், இந்த அந்தஸ்து பெறுவதில், ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் அரசியல் சாயம் பூசி, வேடிக்கை பார்ப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அறியாமை
ஆளுங்கட்சியை பொறுத்தவரை, அனைத்து உண்மையும் தெரிந்தும், நிதி பற்றாக்குறையை காரணம் காட்ட முடியாமல், மத்திய அரசின் அந்தஸ்தை வேறு வகையில் புறக்கணித்து வருவதாக, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஆனால், தி.மு.க., போன்ற எதிர்க்கட்சிகள், உண்மை நிலை என்னவென்றே தெரியாமல், மத்திய அரசு வழங்கும் சிறப்பு அந்தஸ்து என்பது, தமிழக இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து என்ற, ஆதாரமற்ற தகவல்களை கூறி எதிர்த்து வருகின்றன. எதிர்க்கட்சிகளின் இந்த தெளிவற்ற நிலை, ஆளுங்கட்சிக்கே மிகவும் சாதகமாக அமைந்து உள்ளதாக, கல்வியாளர்கள் கருதுகின்றனர்.அண்ணா பல்கலையில் துணை வேந்தராக உள்ள சுரப்பா, பெங்களூரில் உள்ள தேசிய புகழ்பெற்ற ஐ.ஐ.எஸ்.சி.,யின் இயக்குனராக இருந்தவர். அவர் அரசியல் சாயமின்றி, பல்கலையின் நிர்வாக பணிகளை கட்டுப்படுத்தி வருகிறார்.
வளர்ச்சி பாதிக்கும்
இந்த விவகாரம் குறித்து, அண்ணா பல்கலையின் பேராசிரியர்கள், துணை வேந்தரின் செயல்பாடுகளுக்கு ஆதரவாக, கவர்னருக்கு நேரடியாகவே கடிதம் எழுதியுள்ளனர். எனவே, ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும், அண்ணா பல்கலையின் உண்மையான வளர்ச்சிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.மாறாக வேறு, &'சப்ஜெக்ட்&' இல்லை என்பதால், அரசியல் பின்புலம் இல்லாத, தேசிய அளவில் சிறந்த கல்வியாளரான துணை வேந்தர் சுரப்பா என்ற கல்வியாளரை மையப்படுத்தி, அரசியல் செய்வதால், தமிழக மாணவர்களும், தமிழக கல்வி நிறுவனமும் தான் பாதிக்கும். சர்வதேச அளவில், அண்ணா பல்கலைக்கான அந்தஸ்தும் பாதிக்கப்படும் என, நடுநிலையாளர்கள் கருதுகின்றனர்.
ஜாதி ஆதிக்கத்துக்கு &'செக்&'
துணை வேந்தர் சுரப்பா, அண்ணா பல்கலையில், பேராசிரியர்கள் நியமனத்தை வெளிப்படையாக்கி உள்ளார். &'டெண்டர்&' விவகாரங்களில் உரிய விதிகளை பின்பற்றுவதுடன், அதில், அரசியல்வாதிகளின் தலையீடுகளை குறைத்துள்ளார். தேர்வு துறையில், முந்தைய காலங்களில் நடந்த முறைகேடுகளை கண்டறிந்து, சம்பந்தப்பட்டவர்கள் பணி செய்வதற்கு, நிரந்தர தடையும் விதித்துள்ளார் என, பல்கலை ஊழியர்கள் பெருமையாக கூறுகின்றனர். பல்கலையில் பல ஆண்டுகளாக நிலவும், குறிப்பிட்ட ஜாதியினரின் ஆதிக்கம், அதற்காக மறைமுக குரல் கொடுக்கும், சில ஜாதி கட்சிகளின் தலையீட்டை தடுக்கும் வகையில், பல்வேறு நிர்வாக சீர்திருத்தம் மேற்கொண்டுள்ளார்.
அதனால் தான், அவரது செயல்பாடுகளுக்கு, அண்ணா பல்கலையின் பேராசிரியர் சங்கம், முழு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆளுங்கட்சியின் செல்வாக்கையும் மீறி, துணை வேந்தர் சுரப்பாவின் நடவடிக்கைகளுக்கு, பேராசிரியர்கள் ஆதரவு தெரிவித்திருப்பதே, பல்கலையின் முன்னேற்றத்துக்கு எடுத்துக்காட்டு என, பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
