UPDATED : அக் 17, 2020 12:00 AM
ADDED : அக் 17, 2020 10:12 PM
புதுடில்லி:
நடந்து முடிந்த நீட் தேர்வில் ஓடிசாவை சேர்ந்த சோயப் அப்தாப்பும், டில்லியை சேர்ந்த அகன்ஷாவும் 720க்கு 720 முழு மதிப்பெண் பெற்றபோதிலும் தேசிய அளவில் சோயப் அப்தாப் முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது டுவிட்டரில் விவாதத்தை எழுப்பியது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நீட் தேர்வு நடந்தது. நாடு முழுவதும் 13.66 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமையான என்.டி.ஏ., நேற்று வெளியிட்டது. இதில், 7.71 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டை விட 9 சதவீதம் தேர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது. குறிப்பாக அரசு பள்ளியில் படித்த மாணவர் கூட நீட் தேர்வில் சாதித்துள்ளார். இதன்மூலம் நீட்டை வைத்து அரசியல் செய்து வந்த அரசியல்வாதிகளுக்கு இந்த தேர்வு முடிவு சவுக்கடி தரும் விதமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் நாட்டின் முதல் மாணவராக ஒடிசாவை சேர்ந்த சோயப் அப்தாப் என்ற மாணவர் தேர்வாகி உள்ளார். இவர் 720க்கு 720 முழு மதிப்பெண் பெற்றுள்ளார். டில்லியை சேர்ந்த அகன்ஷா சிங் என்ற மாணவியும் 720க்கு 720 முழு மதிப்பெண் பெற்றிருந்தாலும் அவர் இரண்டாம் இடம் பிடித்தார்.
பொதுவாக இதுபோன்று ஒரே மதிப்பெண் பெறுபவர்களை பிறந்ததேதி, அவர்கள் தேர்வு செய்துள்ள பாடங்கள், எத்தனை கேள்விகளுக்கு தவறாக விடையளித்தனர் உள்ளிட்டவைகளை கொண்டு மதிப்பீடு செய்து அறிவிப்பர். இவர்களை பொருத்தமட்டில் வயது மூப்பு அடிப்படையில் ஷோயப் அப்தாப் முதல் மாணவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது நீட் உள்ளிட்ட தேர்வுகளில் பின்பற்றப்படும் வழக்கமான நடைமுறை தான் என்றாலும் இது ஏற்புடையதாக அல்ல என சமூகவலைதளங்களில் பலரும் விவாதித்து வருகின்றனர். இதுபோன்ற விதிகளை நீக்குங்கள் என பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
