திறன் வளர்க்கும் இலவச பயிற்சி: இணையத்தில் பதிய அழைப்பு
திறன் வளர்க்கும் இலவச பயிற்சி: இணையத்தில் பதிய அழைப்பு
UPDATED : அக் 28, 2020 12:00 AM
ADDED : அக் 28, 2020 08:27 AM
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசு திறன் மேம்பாட்டு கழகம், அமெரிக்க நிறுவனமான கோர்ஸரா நிறுவனத்துடன் இணைந்து, வேலைவாய்ப்பற்ற, 50 ஆயிரம் இளைஞர்களுக்கு இணையவழியில், 11 பிரிவுகளில், 4,000க்கும் மேற்பட்ட பாடங்களில், இலவச பயிற்சி அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. கோர்ஸரா நிறுவனம், 80 நாடுகளில் உலகத்தரம் வாய்ந்த திறன்களை வளர்க்கும், இலவச பயிற்சி வகுப்புகளை இணையம் வழியாக நடத்தி வருகிறது.
இந்நிறுவனம், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், கூகுள், ஐ.பி.எம்., மற்றும் பிற அரசு நிறுவனங்களுடன் இணைந்து பொறியியல், இயந்திர கற்றல், கணிதம், வணிகம், கணினி அறிவியல், டிஜிட்டல் சந்தைப்படுத்துதல், மருத்துவம், உயிரியல், சமூக அறிவியல் மற்றும் பிற பாடங்களில், இணைய வழியில் வகுப்புகளை நடத்தி, சான்றிதழ் படிப்புகள் மற்றும் பட்டப் படிப்புகளை வழங்க உள்ளது.
எனவே, உலகின் முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் உள்ள, பயிற்றுனர்களை கொண்டு, தரமான பாடக்குறிப்புகள் மற்றும் காணொலி பாடத் தொகுப்புகளுடன் பயிற்றுவிக்கப் படுகிறது. இப்பயிற்சி முடிந்தவுடன், இணையம் வழியாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி, வேலைவாய்ப்பும் அளிக்கப்படுகிறது.
பயிற்சி பெற விரும்புவோர், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த, 18 வயது பூர்த்தியடைந்து, வேலைவாய்ப்பற்றவராக இருக்க வேண்டும். ஆதார் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண் ஆகிய விபரங்களுடன் வரும், 31க்குள் tnskill.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
