UPDATED : நவ 02, 2020 12:00 AM
ADDED : நவ 02, 2020 08:53 AM
உடுப்பி:
ஓய்வு பெற்ற நாளில், ஏழை மாணவியின் குடும்பத்துக்கு இன்ப அதிர்ச்சியூட்டும் வகையில், தலைமை ஆசிரியர் ஒருவர், தன் சொந்த பணத்தில் வீடு கட்டி கொடுத்த, நெகிழ்ச்சி சம்பவம் உடுப்பியில் நேற்று நடந்தது.
கர்நாடக மாநிலம், உடுப்பியின் நிட்டூர் அரசு நிதியுதவி பெறும் உயர் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தவர் முரளி கடேகார். இவர், 32 ஆண்டுகளாக இந்த பள்ளியில் பணியாற்றி வந்தார். ஐந்து ஆண்டுகளுக்கு முன் தலைமை ஆசிரியராக பணி உயர்வு பெற்றார். நேற்று(அக்., 31) பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
பள்ளியிலிருந்து செல்வதற்கு முன், நயனா என்ற ஏழை மாணவியின் குடும்பத்தின் நிலைமை அறிந்து இன்ப அதிர்ச்சி வைத்தியம் அளிக்க நினைத்தார்.இதற்காக தன் சொந்த பணத்தில் அந்த மாணவி குடும்பத்துக்கு புதிய வீடு ஒன்றை கட்டி நேற்று காலை நேரில் வரவழைத்து சாவி வழங்கினார். பத்து ரூபாய் கடன் வழங்க யோசிக்கும் இந்த காலத்தில், புதிதாக வீடு ஒன்றை கட்டி கொடுத்து மாணவிக்கு பரிசளித்த தலைமை ஆசிரியரின் செயலுக்கு பலரும் பாராட்டுகின்றனர். வீட்டை பார்த்ததும் மாணவியின் குடும்பத்தினர் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தன. ஆசிரியை ஆரத்தழுவி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
உடுப்பி அதமாரு மடத்தின் மடாதிபதி விஸ்வபிரிய தீர்த்த சுவாமிகள், பா.ஜ., எம்.எல்.ஏ., ரகுபதி பட் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
