நீட் தேர்வில் மாநிலத்தில் 3ம் இடம்: உள் ஒதுக்கீட்டால் நெகிழ்ந்த மாணவி
நீட் தேர்வில் மாநிலத்தில் 3ம் இடம்: உள் ஒதுக்கீட்டால் நெகிழ்ந்த மாணவி
UPDATED : நவ 04, 2020 12:00 AM
ADDED : நவ 04, 2020 09:32 AM
தேனி:
நீட் தேர்வில், அரசு பள்ளி அளவில், மாநிலத்தில், மூன்றாம் இடம் பெற்ற தேனி மாணவி அனுஷா தேவி, மருத்துவக் கல்லுாரியில் சேர வாய்ப்பு கிடைத்தும், பண வசதியின்றி தவித்து வருகிறார்.
தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, சங்கரமூர்த்திபட்டியைச் சேர்ந்தவர் அய்யணசாமி; மாட்டு வண்டி ஓட்டும் தொழிலாளி. இவரது மூத்த மகள் அனுஷா தேவி, 19. வீட்டில் இருந்து, 5 கி.மீ., துாரம் நடந்து, வைகை அணை அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தார். 2018 - 19ல் பிளஸ் 2 தேர்வில், 600க்கு 480 மதிப்பெண் பெற்றார்.டாக்டராக வேண்டும் என்ற ஆர்வத்தால், பள்ளி ஆசிரியர்கள் உதவியுடன், அரசு, &'நீட்&' பயிற்சி மையமான, சென்னை சாய் ஸ்பீடு மெடிக்கல் கோச்சிங் சென்டரில், நான்கு மாதங்கள் தங்கி படித்தார். சமீபத்திய, &'நீட்&' தேர்வில், 720க்கு, 397 மதிப்பெண் பெற்றார்.
மருத்துவ படிப்புக்காக, அரசு பள்ளி மாணவர்களுக்கு, மாநில அரசு வழங்கிய, 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில், மாநில அளவில் மூன்றாவது இடத்தை, இம்மாணவி பிடித்துள்ளார். இவருக்கு, மருத்துவ கல்லுாரியில் சீட் கிடைப்பது உறுதியாகி உள்ளது.
அனுஷாதேவி கூறுகையில், &'&'அரசின் சிறப்பு ஒதுக்கீட்டால் தான், கிராமத்தில் படித்த எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அரசுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். ஆனால், குடும்ப ஏழ்மையால், கல்விக்கு செலவிட முடியாத நிலையில், பெற்றோர் உள்ளனர். படிப்புக்கான உதவியை எதிர்பார்த்துள்ளேன்,&'&' என்றார்.
உதவ விரும்புவோர், 63829 39571 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
