UPDATED : நவ 11, 2020 12:00 AM
ADDED : நவ 11, 2020 05:43 PM
இந்த தேர்வுக்கு தயாராவதற்காக, 2017 ம் ஆண்டு முதல்அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் மூலம் இப்பயிற்சி வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவ மாணவியருக்கு, அதற்கென அமைக்கப்பட்ட மையங்களில், விடுமுறை தினங்களில் பயிற்சியளிக்கப்பட்டது. கடலுார் மாவட்டத்தில் 14 மையங்களில் பயிற்சி நடத்தப்பட்டது. தற்போது கொரோனா தொற்று காரணமாக ஆன் லைன் மூலம்விண்ணபித்து, ஆன்லைன் மூலமாகவே பயிற்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டத்தில் 500 மாணவ, மாணவியர் இந்த ஆண்டுவிண்ணப்பித்துள்ளனர்.கடந்தாண்டு 366 பேர் மட்டுமே அரசின் இலவசநீட் பயிற்சியில் பங்கேற்ற நிலையில், தற்போது கூடுதலாக 36.61 சதவீதத்தினர் சேர்ந்துள்ளனர்.
அரசுப்பள்ளியில் படித்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடாக 7.5 சதவீதம் வழங்கம் சட்டம் இந்த ஆண்டு நடைமுறைக்கு வந்துள்ளது.அந்த வகையில், கடலுார் மாவட்டத்தில், 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் அரசுப்பள்ளியில் படித்தோருக்கு, நடப்பாண்டில் மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டிற்காக 26 பேருக்கு கல்வித்துறை சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இவர்களில் 24 பேர் அரசின் இலவச நீட் பயிற்சி பெற்றவர்கள். இதன் காரணமாக, மாணவ மாணவியரிடையே நீட் பயிற்சி மீதான ஆர்வம் அதிகரித்து, கடலுார் மாவட்டத்தில் நீட் பயிற்சியில் சேர, கடந்த ஆண்டை விட தற்போது கூடுதலானோர் விண்ணப்பித்திருப்பது தெரியவந்துள்ளது. கடலுார் மாவட்டத்தில், ஆன்லைன் விண்ணப்பித்தவர்களுக்கு நேற்று நீட் பயிற்சி வகுப்புகள் துவங்கிறது.
திங்கள் முதல் நான்கு நாட்களுக்கு பாட வாரியாக பயிற்சியும், இரண்டு நாட்கள் தேர்வுகள் நடத்தப்படுகிறது. 36 வாரங்கள் நடத்தப்படும் இப்பயிற்சியில் 23 வாரங்கள் மட்டும் பாடங்களாகவும் அதன் பின்னர் மாதிரித் தேர்வுகளாகவும் நடத்தப்பட உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
