UPDATED : நவ 12, 2020 12:00 AM
ADDED : நவ 12, 2020 04:05 PM
புதுச்சேரி:
உலக நாடுகளின் தேசிய கொடியை அடையாளம் காணுவதில் சாதனை புரிந்த, நாவற்குளம் அரசு தொடக்கப் பள்ளி மாணவரை, கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடு பாராட்டினார்.
நாவற்குளம் அரசு தொடக்கப் பள்ளியின் மூன்றாம் வகுப்பு படித்து வரும் மாணவர் சுவினேஷ், 8; இவர் 81 வினாடிகளில் 195 நாடுகளின் தேசியக் கொடிகளைச் சரியாக கண்டுபிடித்து சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். ஏற்கெனவே உள்ள சாதனையான 93 வினாடிகளில் 195 நாடிகளின் கொடிகளை அடையாளம் காட்டுதலை முறியடித்து இச்சாதனையை அவர் புரிந்துள்ளார்.
&'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்&' நிறுவனம் மாணவரின் சாதனையை அங்கீகரித்து, சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்துள்ளது. மேலும் சுவினேசுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்துள்ளது.
சாதனை மாணவர் சுவினேஷ் கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடுவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். கல்வித்துறை துணை இயக்குநர் (பெண் கல்வி) நடனசபாபதி, பள்ளித்துணை ஆய்வாளர் மல்லிகாகோபால், பள்ளித்தலைமையாசிரியர் தமயந்தி ஜாக்குலின் ஆகியோர் மாணவரை பாராட்டினர்.
மாணவருக்கு பயிற்சி அளித்த பெற்றோர் மணிகண்டன்-மஞ்சுளா ஆகியோரையும், வழிகாட்டி ஊக்கமளித்த பள்ளி ஆசிரியர்களையும், பள்ளியின் மேலாண்மைக்குழு மற்றும் பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தினர் பாராட்டினர்.
