டிச.,வரை பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க ஐகோர்ட் பரிந்துரை
டிச.,வரை பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க ஐகோர்ட் பரிந்துரை
UPDATED : நவ 12, 2020 12:00 AM
ADDED : நவ 12, 2020 04:13 PM
மதுரை:
தமிழகத்தில், நவ., 16ல் பள்ளிகள் திறப்பதை, டிசம்பர் வரை ஒத்தி வைப்பது குறித்து பரிசீலிக்க, அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வாய்மொழியாக, வேண்டுகோள் விடுத்தது. இது தொடர்பாக, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தேனி மாவட்டம், லோயர்கேம்ப் பகுதியைச் சேர்ந்த, வழக்கறிஞர் ராம்பிரசாத் தாக்கல் செய்த பொதுநல மனு:
கொரோனா இரண்டாவது அலை தாக்குதலில், பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் விடுதிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் நவ., 16 முதல் திறக்கப்படும் என அரசு, அக்., 31ல் அறிவித்தது.
பள்ளி, கல்லுாரிகளில், மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வாய்ப்பில்லை. அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள், முழுமையாக இயக்கப்படவில்லை. இலவச பாஸ் வைத்துள்ள மாணவர்கள், பள்ளிகளுக்குச் செல்வதில் சிரமங்கள் உள்ளன.
&'ஆன்லைன்&' வகுப்புகள் நல்ல முறையில் நடக்கின்றன. பல பள்ளிகள், கல்லுாரிகள், விடுதிகளை, கொரோனா நோயாளிகள் தங்குவதற்கான தனிமை முகாம்களாக அரசு பயன்படுத்தியது. பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் விடுதிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் நவ., 16 முதல் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனு செய்தார்.
நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு:ஆசிரியர்கள், டாக்டர்கள், நிபுணர்களுடன் ஆலோசித்து, அரசு முடிவெடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்ட பின், கொரோனா பரவலால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
கொரோனா இரண்டாவது அலையின்போது, பாதிப்பு அதிகம் இருக்கலாம் என்ற அச்சம் உள்ளது. இவற்றையும், இதர நாடுகளில் உள்ள நிலைமையையும் அரசு பரிசீலித்து, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பள்ளிகளை திறப்பதை டிசம்பர் வரை ஒத்தி வைக்கலாமே. கொரோனாவால் சில நீதிபதிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கள் ஆலோசனையை அரசு பரிசீலிக்கும் என நம்புகிறோம். எங்கள் கருத்தை, உத்தரவாக பிறப்பிக்க விரும்பவில்லை. இவ்வாறு, நீதிபதிகள் தெரிவித்தனர்.
அரசுத் தரப்பில், &'பள்ளிகளைத் திறப்பது குறித்து, பெற்றோரிடம் கருத்துகள் கோரப்பட்டன. பெரும்பாலான பெற்றோர், பள்ளிகளைத் திறக்க விரும்பவில்லை என தெரியவந்துள்ளது. அரசு பரிசீலித்து முடிவெடுக்கும்&' என தெரிவிக்கப்பட்டது.
தமிழக தலைமைச் செயலர், உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை செயலர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, நவ., 24க்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
