UPDATED : நவ 15, 2020 12:00 AM
ADDED : நவ 15, 2020 11:09 PM
இந்த வாரம் கீழ்க்கண்ட புத்தகங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். வாசிக்கும் தாகமுள்ள வாசகர்கள் தேவையான புத்தகங்களை தேர்வு செய்து படிக்கலாம். வாசிக்கும் இன்பத்தை அனுபவிக்கலாம்.
01. தமிழ் படிக்க எழுத 45 நாட்கள் மாணவர் கையேடு
ஆசிரியர்: முனைவர் மு.கனகலட்சுமிவெளியீடு: சிவசக்தி பதிப்பகம்4, முனியாண்டி மேற்கு சந்து,வடக்குத் தெரு, ராமநாதபுரம்.அலைபேசி: 93455 71942பக்கம்: 132 விலை: ரூ.500
நுட்பமாக ஆய்வு செய்து, உருவாக்கப்பட்டுள்ள பயிற்சி நுால். தமிழ் மொழியை எளிமையாக புரியும் வகையில் பாடங்களைக் கொண்டு உள்ளது. கிராமப்புற அரசுப் பள்ளி மாணவ - மாணவியரிடம் சோதனை முறையில் அமல்படுத்தி, மாற்றங்களை கண்டு கவனம் பெற்றுள்ளது. கல்வி அதிகாரிகளின் பாராட்டு அணிந்துரையாக உள்ளது.
மொழி தொடர்பான ஆய்வை, தத்துவத்துக்குள் மட்டும் நிறுத்தாமல், களச் செயல்பாடு மூலம் முக்கியத்துவம் பெற வைத்துள்ளார் ஆசிரியர்.
நுாலில், வண்ணப் படங்களும், குறைந்த எழுத்துக்களும், குறியீடுகளும் உள்ளன. எளிய விளக்கங்களுடன் புரிந்து கற்கும் வகையில், 45 நாட்களுக்கான பாடம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. சுயக் கற்றல் மூலம் தேர்ச்சி பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
கற்கும் செயலை, கிறுக்குதல், புள்ளிகளை இணைத்தல், வண்ணம் தீட்டுதல், கண்டுபிடித்தல், ஆசிரியருடன் சேர்ந்து படித்தல், தானாக படித்தல், பொருத்துதல், எழுதுதல், நிரப்புதல், தேர்வு எழுதுதல், அளவீடு என வகைமைப்படுத்தி, பாடங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. பாடங்கள் குறி, எழுத்து, சொல், தொடர் என விரிந்துள்ளன.
எழுத்தின் வடிவமைப்பை, சுழி, கீழ்பிறை, கீழ்விலங்கு, படுக்கை கீற்று, ஏறுகீற்று, சாய்கீற்று, வளைகீற்று, கால், மேல்விலங்கு, சுழிமேல் விலங்கு, மடக்கேறுகீற்று, மடக்கேறுகீற்றுக்கால், கொம்பு, கொம்புச்சுழி, இரட்டைக்கொம்பு, கொம்புக்கால் என புதுமையாக அறிமுகம் செய்துள்ளார்.
ஓர் எழுத்தை, எங்கு துவங்கி, எப்படி முடிக்க வேண்டும் என்பது, மிக எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. மேற்பார்வையாளர் தேவையில்லாத வடிவமைப்பாக உள்ளது. மிக நுட்பமாக ஆராய்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. பழக வசதியாக பயிற்சிக் களங்களும் உள்ளன.
குறைந்த புரிதல் திறனுள்ளோரும், நுாலுக்குள் எளிதாக நுழையலாம். கிறுக்கலாக துவங்கி, எழுத்தாக வடிவமைக்கும் கலை, நயமாக சொல்லப்பட்டுள்ளது. தமிழ் எழுத்து பயிற்சி களத்தில் புதிய மைல்கல் இந்த நுால். குறைந்த திறனில், அதிக பலன் என முயன்று உருவாக்கப்பட்டுள்ளது.
- அமுதன்
02. உயிரியல் கடிகாரம்
ஆசிரியர்: ஆர்னிகா நாசர்வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிட்டெட்,21, &'லட்சுமி&' சத்யசாய் நகர், மதுரை - 625 003.டோல்ப்ரீ : 1800 425 7700பக்கம்: 188 விலை: ரூ.200
ஆர்னிகா நாசரின் விஞ்ஞான சிறுகதைகள் தொகுப்பின் இரண்டாவது புத்தகம். கற்பனையை விண்வெளியை நோக்கி செயற்கை கோளாய் ஏவியிருக்கிறார்.
மனித ஜீனுக்குள் சேவலின் ஜீன் பொருத்தினால் என்னவாகும்? கதை வழியே மிரட்டுகிறார். தீவிரவாதிகளை சுட்டு பொசுக்கும் அசகாய சூரன் விவேக், ஆய்வக லேப் சிலைடில் காட்சிப் பொருளாய் ஒட்டப்படும் பரிதாபம்... அடடே என வியப்பை ஏற்படுத்துகிறது. பெண் பார்க்க செல்லும் சுதாகரன் முற்பிறவி ஞாபகத்தால் அலைக்கழியும் மதுமிதாவிடம் மனதை பறிகொடுத்து விபத்தில் பலியாகும் கதை... இது, 48வது பிறவி தொடர்கதை என நம்மை அதிர வைக்கிறார்.
இதிலுள்ள, 23 கதைகளும், 23 ட்விஸ்ட்களுடன் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் பயணிக்கின்றன. அத்தனையும் படு சுவாரசியம். கிரைம், திரில்லர், சயின்ஸ் ஆர்வத்திற்கு தீனி போடுகிறார் இந்த கதைகளின் வழியே. பயணங்களின் போது தனிமையாக இருந்தால், இந்த புத்தகம் கூடவே துணைக்கு வரும்; கொஞ்சம் பயமுறுத்தும், கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யும்.
- எம்.எம்.ஜெ.,
03. அணுவில் சிவ நடனம்
ஆசிரியர்: புலவர்.சி.எஸ்.முருகேசன்வெளியீடு: சங்கர் பதிப்பகம்சென்னை - 49.தொலைபேசி: 044 - 26502086பக்கம்: 122 விலை: ரூ.100
ஆன்மிக சிந்தனைக்கு உரமிட்டு, அறிவு வளர்ச்சிக்கு வித்திடும் நுால். &'அவனின்றி ஓர் அணுவும் அசையாது&' என்ற திருமூலரின் வாக்கை விளக்குகிறது. இறைவன் நடனம் செய்யும் வெளிகளே, அம்பலம் என அழைக்கப்படுகின்றன என்று கூறி, விளக்குகிறார். அணுவைப்பற்றி ஆய்வு செய்த, டெமோகிரிடஸ் என்ற கிரேக்க தத்துவஞானியைக் குறிப்பிடுவதும், அணுவைப் பிரிக்க முடியும் என்று கூறிய ஜே.ஜே.தாம்சன் பற்றியும் குறிப்பிடுகிறார்.
அணுநிலை முழுவதும் கருவினாலேயே உண்டாகிறது என்ற ரூதர்போர்டு பற்றியும், கடவுள் துகளில் அகப்பட்டது தான் இறைவனின் பிரபஞ்ச நடனம் என கூறுவதும், பிரபஞ்சத் தோற்றம் குறித்த விளக்கமும், திருமந்திரம், திருவாசகம், திருவருட்பா, சிவஞானசூத்திரம், தேவாரம் நுால்களை இவற்றுக்கு ஆதாரமாகக் கூறுகிறார்.
நடராஜரின் நடனத்தின் அதிர்விழைக் கோட்பாடுகள் எளிமையாகக் கூறப்பட்டுள்ளன. மனிதனுக்கு ஆன்மிகமும், அறிவியலும் தேவை என்று கூறியுள்ளார். சிந்திக்க உதவும் நுால்.
- டாக்டர் கலியன் சம்பத்து
04. கடல் சொன்ன கதைகள்
தொகுப்பாசிரியர்: வறீதையா கான்ஸ்தந்தின்வெளியீடு: பாரதி புத்தகாலயம்7, இளங்கோ சாலை, சென்னை - 18.அலைபேசி: 87780 73949பக்கம்: 256 விலை: ரூ.245
நெய்தல் திணை மக்களான கடல்சார் மக்களைப்பற்றிய சிறுகதைத்தொகுப்பு. 21 கதைகளைக் கொண்டது. அன்பு, மனவெறுமை, வறுமை, ஆசாபாசங்கள் ஆகியவற்றை எதார்த்தமாய்க் காட்டுவன பல கதைகள்.
உணவு விடுதியில் காபி அருந்தும் தம்பதியர் தாங்கள் செல்லும் பேருந்தில் வந்த உறவுக்காரக் கிழவியைக் காபி அருந்தக் கூட அழைக்கவில்லையே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.மருமகள் தம்மை நடத்தும் செயலைக்கண்டு மிக வருந்திக் கடலான தாய்மடியில் கலந்து விடுகிறா.ன் மிக்கேல் வலையோடு கடலில் சிக்கிய சுப்பையனையும், லேயோனையும் ஏனைய கடலோடிகள் கரை சேர்க்கின்றனர்.
ஐந்துநாள் விடாமல் சைக்கிள் ஓட்டி வாழ்வுக்கு வழி தேடும் அப்பியின் கதை, சவுக்குத் தோப்புக்குள் நிகழ்ந்ததைச் சொல்ல மறுக்கும் சிறுவர்களின் நிலை என்று ஒவ்வொரு கதையும் பாத்திர வார்ப்பால் சிறக்கிறது. மீனவ மக்களின் வாழ்க்கைச் சிக்கல், யதார்த்த பாணி வட்டார வழக்கில் நகர்கிறது.
கதைகள் கடல்சார்ந்த மக்களின் வட்டார மொழிநடையின் பின்னணியில், அவர்களின் மனப்போராட்டங்களை அழுத்தமாகச் சித்தரிக்கின்றன.
- ராம.குருநாதன்
05. சிலப்பதிகாரத்தில் அறக்கோட்பாடுகள்
ஆசிரியர்: பேராசிரியர் அப்துல்காதர்வெளியீடு: நேஷனல் பப்ளிஷர்ஸ்சென்னை - 17.அலைபேசி: 94440 47786பக்கம்: 192 விலை: ரூ.180
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் வழங்கியுள்ள சமயப் பொதுமை, அறச் சிந்தனை, இல்லறம், துறவறம், அரசியல் அறம், சமுதாய அறம் எனப் பல்வேறு தலைப்புகளில் இந்த நுால் அறச் சிந்தனைகளை வழங்குகிறது.
உலக இலக்கியங்கள், உலகச் சமயங்கள், உலக வாழ்வியல் ஆகியவற்றிலிருந்து இந்நுாலில் தரப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகள், கருவூலத் தன்மைக்குக் கட்டியம் கூறுகின்றன.மொழி நடையானது பேச்சு நடையில் இனிமையாக அமைக்கப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தை படிப்பதற்கான திறவுகோல்.
- முகிலை ராசபாண்டியன்
06. பன்னிரு ஆழ்வார்கள்
ஆசிரியர்: வெங்கட்ரமணன்,வெளியீடு: அருணா பப்ளிகேசன்ஸ்,சென்னை - 49.தொலைபேசி: 044 - 2650 7131பக்கம்: 144 விலை: ரூ.55
பொய்கை ஆழ்வார் முதல் திருமங்கை ஆழ்வார் வரை உள்ள பன்னிரெண்டு ஆழ்வார்களின் திவ்விய சரித்திரத்தை, வாழ்க்கை நிகழ்வுகளோடு முழுமையாக விளக்குகிறது.
ஆழ்வார்கள், திருமாலின் அம்சமாகத் தோன்றியவர்கள் என்று அறிய முடிகிறது. திருமாலின் மேலான குணங்களையும், ஆழ்வார்களின் பண்பட்ட அனுபவங்களையும் அறிய துணை நிற்கும் நுால்.
- பேராசிரியர் இரா.நாராயணன்
07. அறிஞர் அறவாணர் அன்புரைகள்
தொகுப்பாசிரியர்: க.அ.அறிவாளன்வெளியீடு: தமிழ்க் கோட்டம்சென்னை - 29.தொலைபேசி: 044 - 23744568பக்கம்: 128 விலை: ரூ.110
அறிஞர் அறவாணன், 43 நுால்களுக்கு வழங்கிய முன்னுரைகளின் தொகுப்பு நுால். கவிதை, இலக்கியம், சமயம், பெண் உரிமை, வரலாறு, அறிவியல் என பல வேறுபட்ட நுால்களை ஆய்ந்து, காய்தல் உவத்தல் இன்றி அணிந்துரை எழுதியுள்ளார்.
அதிலும் ஜெயித்து இருக்கிறார் அறிஞர் அறவாணன். ஒரு சோறு பதம். பச்சையப்பர் கட்டியது கல்விக் கோவில் மட்டுமல்ல, அறம் வளர்க்கும் திருக்கோவில் கோபுரங்கள். 40 வயது வாழ்ந்த பச்சையப்பர் செய்த நல்ல தர்மங்கள் எங்கும் புகழ் சொல்லி நிற்கும். பச்சையப்பர் திசை நோக்கி வணக்கங்கள் என்று சொல்லி முடிக்கிறார் அறவாணன்.
- சீத்தலைச்சாத்தன்
08. திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்
ஆசிரியர்: வேணு சீனிவாசன்வெளியீடு: அருணா பப்ளிகேஷன்ஸ்சென்னை - 49.அலைபேசி: 94440 47790பக்கம்:168 விலை: ரூ.55
எதுவும் படிக்காத தயிர் விற்கும் பாமரப் பெண், பெருமாள் மீது பக்தி கொண்டு கூறிய, 81 வாக்கியங்களை விளக்குவதே இந்த நுால். ஆழ்வார்கள், ராமாயண, மகாபாரத, பாகவத கதை மாந்தர்கள் பற்றிய பல அரிய செய்திகள் குவிந்து கிடக்கின்றன.
பகவான், பாகவத கைங்கரியங்களை விளக்கிய தயிர் விற்கும் பெண்ணுக்கு அருள் செய்து, அவள் வீட்டில் அமுது செய்கிறார் ராமானுஜர். பொருளாசையால் அலையும் உலகில், அருளாசை பெற உதவும் வைணவப் பிரசாதம்.
- முனைவர் மா.கி.ரமணன்
