UPDATED : டிச 13, 2020 12:00 AM
ADDED : டிச 13, 2020 04:00 PM
இளம் வயதினர்களில் சரியான நேர அளவிலான துாக்கத்தை கடைபிடிப்பவர்களுக்கு, இருதய பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 42 சதவீதம் வரை குறைகிறது என அமெரிக்கன் இருதய கூட்டமைப்பு வெளியிட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துாக்கம் அனைவருக்கும் மிக அவசியம். அதே நேரத்தில் அந்த துாக்கம் என்பது நிம்மதியான, சரியான நேரத்தில், சரியான அளவில் இருக்க வேண்டும். இது உடல்நலனுக்கு மிக நல்லது. ஒவ்வொருக்கும் குறைந்தது 7 - 8 மணி நேர துாக்கம் மிக அவசியம். அதுவும் இந்த துாக்கம் என்பது சரியான நேரத்தில் அமைய வேண்டும். பகலில் அல்லாமல் இரவில் சரியாக துாங்கும் நேரத்தில் இது அமைய வேண்டும்.
இன்றைய சூழலில் வயது வித்தியாசமின்றி பலரும் இருதய பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். இதற்கு உடற்பயிற்சி இல்லாமை, உணவு பழக்க வழக்கம், மது, சிகரெட் பழக்கம் காரணமாக அமைகிறது. அமெரிக்காவின் இருதய கூட்டமைப்பு நடத்திய ஆய்வில், சரியான துாக்கமில்லாதது இருதய பாதிப்புக்கு காரணமாக அமைகிறது என தெரிய வந்துள்ளது.
இந்நிறுவனம் ஆழ்ந்த துாக்கம் - இருதய பாதிப்புக்கு இடையே உள்ள தொடர்பு குறித்து ஆய்வு நடத்தியது. இதில் பிரிட்டனை சேர்ந்த 4,08,802 பேர் பங்கேற்றனர். இவர்கள் 37 - 73 வயதுக்கு உட்பட்டவர்கள். 2006 - 2010 காலகட்டத்தில் இந்த ஆய்வு நடந்தது. 2019 ஏப்., 1 வரை இருதய பாதிப்பு பிரச்னை குறித்த தகவல் சேகரிக்கப்பட்டது.
சராசரியாக பத்து ஆண்டுகள் இவர்கள் கண்காணிக்கப்பட்டனர். இதில் ஒருவரின் துாக்கமின்மை பிரச்னை, குறட்டை, பகல்நேர துாக்கம் போன்றவை கணக்கில் கொள்ளப்பட்டது. ஆய்வில் பங்கேற்றவர்களில் சிலர் இரவில் சீக்கிரமாக துாங்கி, அதிகாலையில் எழும் பழக்கம் வைத்திருப்பர். சிலர் இரவில் தாமதாக துாங்கி, காலையில் தாமதாக எழும் பழக்கம் வைத்திருப்பர். இவை குறித்தும் ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேலும் துாக்கம் என்பது ஏழு மணி நேரத்துக்கு குறைவு, 7 - 8 மணி நேரம், 9 மணி நேரத்துக்கு மேல் என மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டனர். ஆய்வு முடிவில், சரியாக துாக்க பழக்கம் இல்லாதவர்களுடன் ஒப்பிடுகையில், தொடர்ந்து சரியான அளவு துாங்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இருதய பிரச்னை பாதிப்பு 42 சதவீதம் குறைவாக இருந்ததை கண்டறிந்தனர்.
ஏன் அவசியம்
தினமும் 8 மணி நேர துாக்கம் அவசியம் குறித்து டெக்சாஸ் மருத்துவமனை டாக்டர் சீனிவாஸ் குடிமெட்லா கூறுகையில், துாங்கும் போது ரத்த அழுத்தம், பகல் நேரத்தை விட குறைவாக அதாவது 120/70 என்ற அளவுக்கு குறைவாக இருக்கும். துாக்க பிரச்னை இருப்பவர்களுக்கு ரத்த அழுத்தம், நீண்டநேரம் அதிகமாகவே இருக்கும். இதனால் இருதய பாதிப்பு வாய்ப்பு அதிகம் என்றார். பகல் நேரத்தில் துாங்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு இருதய பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 34 சதவீதம் குறைவு என ஆய்வு தெரிவித்துள்ளது.
