போலி நீட் சான்று கொடுத்து மோசடி; மாணவி, டாக்டர் மீது வழக்கு பதிவு
போலி நீட் சான்று கொடுத்து மோசடி; மாணவி, டாக்டர் மீது வழக்கு பதிவு
UPDATED : டிச 14, 2020 12:00 AM
ADDED : டிச 14, 2020 10:30 PM
சென்னை:
போலியாக தயாரிக்கப்பட்ட, நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழை தாக்கல் செய்து, மருத்துவக் கல்லுாரியில் சேர முயன்ற மாணவி மற்றும் பல் டாக்டரான அவரது தந்தை மீது, ஐந்து பிரிவுகளில், போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர்களை சேர்ப்பதற்கான கவுன்சிலிங், நவ., 18ல் துவங்கியது. அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடு, சிறப்பு பிரிவினர் ஒதுக்கீடு முடிந்து, பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் நடந்து வந்தது. இம்மாதம், 7ம் தேதி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, நேரு நகரைச் சேர்ந்த, மாணவி தீக் ஷா, 18, பல் டாக்டரான தன் தந்தை பாலசந்திரனுடன், கவுன்சிலிங்கிற்கு வந்தார்.அப்போது, நீட் தேர்வில், 610 மதிப்பெண் பெற்றதாக, தீக் ஷா சான்றிதழ் தாக்கல் செய்தார்.
மருத்துவ கவுன்சிலிங் நடத்தும் அதிகாரிகள், அவரின் மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்தனர். அதில், நீட் தேர்வில் தீக் ஷா, 27 மதிப்பெண் மட்டுமே பெற்றிருந்தது தெரியவந்தது. தந்தையுடன் சேர்ந்து, போலி மதிப்பெண் சான்றிதழை தாக்கல் செய்து, மருத்துவக் கல்லுாரியில் சேர முயன்றது அம்பலமானது.
இதுகுறித்து, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜன், நேற்று முன்தினம், பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து, தீக் ஷா, பாலசந்திரன் ஆகியோர் மீது, மோசடி, போலி ஆவணம் தயாரித்தல் உட்பட, ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இருவரிடமும் விசாரித்து வருகின்றனர். இதுபோன்று வேறு எந்த மாணவராவது, போலி சான்றிதழ் சமர்ப்பித்தாரா என்றும், மருத்துவ கல்வி இயக்ககம் மறு ஆய்வு செய்து வருகிறது. ஏற்கனவே நடந்த, &'நீட்&' தேர்வு முறைகேடு தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆள்மாறாட்டம் வாயிலாக தேர்வு எழுதி, தேனி மருத்துவக் கல்லுாரியில் சேர முயன்ற, சென்னையைச் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா; டாக்டரான அவரது தந்தை உட்பட, 10 பேரை கைது செய்தனர். தமிழக மாணவர்களுக்கு பதிலாக, நீட் தேர்வு எழுதிய, வட மாநிலத்தைச் சேர்ந்த, இரண்டு பெண்கள் உட்பட, 10 பேரை தேடி வருகின்றனர்.
