UPDATED : டிச 18, 2020 12:00 AM
ADDED : டிச 18, 2020 07:43 PM
புதுச்சேரி:
மருத்துவ மாணவர் சேர்க்கையை வரும் 31 தேதிக்குள் மூன்று கட்டமாக முடிக்க கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை பெறுவது, அரசு பள்ளி மாணவர்களுக்கு பத்து சதவீத உள்ஒதுக்கீடு தொடர்பாக அதிகாரிகளுடன் கவர்னர் கிரண்பேடி ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் தலைமைச்செயலர் அஸ்வினி குமார், வளர்ச்சி ஆணையர் அன்பரசு, சட்டத் துறை செயலர் ஜூலியட் புஷ்பா, சுகாதாரத் துறை செயலர் அபிஜித் சவுத்ரி, சுகாதாரத் துறை இயக்குனர் மோகன்குமார், சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தை தொடர்ந்து கிரண்பேடி பிறப்பித்துள்ள உத்தரவு:
சுகாதாரத்துறை, மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு படி சென்டாக் செயல்பட தெரிவிக்க வேண்டும். 2020--21 சென்டாக் தகவல் குறிப்பேட்டில் குறிப்பிட்டுள்ளதன்படியே அரசு ஒதுக்கீடு, இடஒதுக்கீடு ஆகியவை இடம்பெற வேண்டும். சென்டாக் எவ்வித தாமதமின்றி மருத்துவ மாணவர் சேர்க்கையை குறிப்பிட்ட காலமான டிசம்பர் 31ம் தேதிக்குள் மூன்று கட்டமாக நடத்தி நிறைவு செய்ய வேண்டும்.
அதேவேளையில் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சத இடங்களை அரசுக்கு பெறும் கோப்பு, அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு பத்து சதவீத உள்ஒதுக்கீடு கோப்பு ஆகியவற்றை ஒப்புதல் பெற புதுச்சேரி அரசு தொடர்ந்து முயல வேண்டும்.
மருத்துவக்கட்டணம் கடந்தாண்டு நிர்ணயித்ததே தொடரும். வருங்காலங்களில் அரசு அனுமதி தந்த பிறகே சென்டாக் தகவல் குறிப்பேட்டை பிரசுரிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
