UPDATED : டிச 18, 2020 12:00 AM
ADDED : டிச 18, 2020 07:54 PM
மதுரை:
&'தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திறம்பட செயல்படுவதாகத் தெரியவில்லை. அதில் தகுந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும். விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதில் அரசியல் உள்ளது&' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தி தெரிவித்தது.
மதுரை, அண்ணாநகரைச் சேர்ந்தவர் கோபி கண்ணன். மாற்றுத்திறனாளியான இவர் சர்வதேச, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள் வென்றுள்ளார்.
அரசு துறை
கடந்த, 2003ல் தமிழக அரசு துறையில் துாய்மைப் பணியாளராக நியமிக்கப்பட்டார். 2014ல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதை ரத்து செய்து, நிரந்தரப் பணி வழங்கக் கோரி, கோபி கண்ணன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதிகள் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் ஒன்பதாம் வகுப்பு படித்துள்ளார். அவரது கல்வித் தகுதிக்கேற்ப, அலுவலக உதவியாளர் பணி வழங்கிஉள்ளதாக அரசு தரப்பு கூறுகிறது. கிரிக்கெட் வீரர்களுக்கு நட்சத்திர அந்தஸ்து வழங்கப்படுகிறது. பிற விளையாட்டு வீரர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்
.விளையாட்டுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கிய நிதி எவ்வளவு, சாதனை புரிந்த அறிவுசார் திறன் குறைந்த மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்க சாத்தியம் உள்ளதா என மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும். கோபி கண்ணனுக்கு தகுந்த பணி வழங்குவது குறித்து மாநில அரசு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, உத்தரவு பிறப்பித்தனர்.
அவகாசம்
நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. மத்திய அரசு தரப்பு, &'மாற்றுத் திறன் விளையாட்டு வீரர்கள் சலுகைகள் பெற, பல்வேறு நடைமுறைகள் உள்ளன&' என, தெரிவித்தது. மாநில அரசு தரப்பு அவகாசம் கோரியது.
நீதிபதிகள் உத்தரவு:
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திறம்பட செயல்படுவதாகத் தெரியவில்லை. அதில் தகுந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதில் அரசியல் உள்ளது. தற்போது, எதிர்பாராதவிதமாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர், கிரிக்கெட் வீரராக தேர்வாகியுள்ளார். மாற்றுத்திறன் சாதனை விளையாட்டு வீரர்களுக்கு என்னென்ன சலுகைகள் உள்ளன என்பது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மத்திய, மாநில அரசுகள் டிச., 21ல் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
