தேசிய கலா உற்சவ் போட்டியில் அமலோற்பவம் பள்ளிக்கு பதக்கம்
தேசிய கலா உற்சவ் போட்டியில் அமலோற்பவம் பள்ளிக்கு பதக்கம்
UPDATED : ஜன 30, 2021 12:00 AM
ADDED : ஜன 30, 2021 09:16 AM
புதுச்சேரி:
தேசிய அளவிலான கலா உற்சவ் போட்டியில் இரட்டைப் பரிமாண காட்சிக்கலை ஆடவர் பிரிவில் பங்கேற்ற அமலோற்பவம் மேல் நிலைப் பள்ளி மாணவர் அவினாஷ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி சார்பில் தேசிய கலா உற்சவ் போட்டி இணைய வழியாக கடந்த 11 முதல் 22ம் தேதி வரை நடந்தது.இப்போட்டியில் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 576 மாணவர்கள் 38 அணிகளாக பங்கேற்றனர். அமலோற்பவம் மேல் நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவர் கள் ஸ்ரவந்தி, தேவபிரசாத், ஹரிணி, புஷ்பிதா, பிளஸ் 1 மாணவர் சாந்தரூபன், பத்தாம் வகுப்பு மாணவர் அவினாஷ் ஆகியோர் புதுச்சேரி சார்பில் பங்கேற்றனர்.
இரட்டைப்பரிமாண காட்சிக்கலை ஆடவர் பிரிவில் பங்கேற்ற மாணவர் அவினாஷ் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். பண்டிகை காலங்களில் பெண்கள் ஆடும் கரகாட்டம் குறித்த கருத்தை மையப்படுத்தி ஓவியமாக தீட்டியிருந்தார். மத்திய மனித வளமேம்பாடு, கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன செயலர் ஹரிஷ்குமார், டாக்டர் பவண் சுதிர் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.
பள்ளி மாணவர் அவினாஷிற்கு 2 கிராம் தங்க காசு வழங்கி பள்ளி முதுநிலை முதல்வர் லுார்துசாமி பாராட்டினார். மாணவருக்கு உதவிய பள்ளி நுண் கலைத் துறை தலைவர் மேரி ஸ்டெல்லா மற்றும் ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். தேசிய கலா உற்சவ் போட்டியில் மூன்றாவது முறையாக பதக்கங்களை அமலோற்பவம் மேனிலைப் பள்ளி பெற்றுள்ளது.
