ஜப்பான் கைவண்ணத்தில் ரெடியானது மதுரை எய்ம்ஸ் இறுதி திட்டம்
ஜப்பான் கைவண்ணத்தில் ரெடியானது மதுரை எய்ம்ஸ் இறுதி திட்டம்
UPDATED : பிப் 03, 2021 12:00 AM
ADDED : பிப் 03, 2021 10:52 AM
மதுரை:
ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை - ஜிக்கா கைவண்ணத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இறுதி திட்ட மதிப்பீடு தயார் நிலையில் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
மதுரை தோப்பூரில், 1,264 கோடியில் &'எய்ம்ஸ்&' மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. நிதியை ஜிக்காவிடம் கடனாகப்பெற ஏற்பாடு செய்யப்பட்டது. இரு ஆண்டுகளுக்கு முன், அடிக்கல் நாட்டப்பட்டது. இதுவரை பிரதான கட்டுமான பணிக்கு கடன் கிடைக்கவில்லை. ஒன்றரை ஆண்டுக்கு முன், ஜிக்காகுழுவினர் மதுரை தோப்பூரில் ஆய்வு செய்தனர்.
அவர்களுடன் வந்த மத்திய அரசு அதிகாரிகள், &'ஆய்வு முடிவு, ஏற்கனவே நம் அரசு தயாரித்த முதல்நிலை திட்டமதிப்பீடு அடிப்படையில் பிரதான திட்டமதிப்பீட்டை ஜிக்கா தயாரிக்கும். அதன் அடிப்படையில் தான் அனைத்து கட்டுமானங்களும் வரும். அதில் குறிப்பிடப்படும் மதிப்பீட்டு தொகை தான் இறுதியானது.
திட்டமதிப்பீடு தயாரானதும் ஜப்பான், இந்தியா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி பணிகள் துவங்கும்&' என தெரிவித்திருந்தனர். ஆனால், ஒன்றரை ஆண்டுகளாக முன்னேற்றம் இல்லை. கொரோனா தாண்டவமும் துவங்கியதால் ஜிக்கா குழுவிடம் இருந்து நல்ல செய்திகள் வரவில்லை. தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டும் மத்திய அரசு தகவல் அளித்து வந்தது. முதலில், 2020 டிசம்பரில் கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றது. பிறகு மார்ச் என்று அறிவித்தது.
ரெடியானதா இறுதி திட்டம்?
இந்நிலையில், தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் பாண்டியராஜா, மதுரை எய்ம்ஸ் பற்றி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில், 19 கேள்விகளை கேட்டிருந்தார். சில கேள்விகளுக்கு நேற்று பதிலளித்த மத்திய அரசு, &'ஜிக்காவின் திட்டமதிப்பீடுப்படி எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதி, 2,000 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில், 85 சதவீதத்தை ஜிக்கா கடனாக தரும். 15 சதவீதத்தை மத்திய அரசு வழங்கும்&' என தெரிவித்துள்ளது.
இதன்மூலம் இறுதித் திட்டத்தை ஜிக்கா தயார் செய்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே, இனி கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் தேதி தள்ளிப்போக வாய்ப்பில்லை. சில நாட்களுக்கு முன், மத்திய சுகாதார செயலரை, மதுரை எம்.பி., வெங்கடேசன் சந்தித்தார்.
அவரிடம் எய்ம்ஸ் மருத்துவமனையுடன் தொற்று நோய் மருத்துவமனை ஒன்று இணைவதாகவும், இதனால் திட்ட மதிப்பீடு, 2,000 கோடி ரூபாயாக உயர்ந்திருப்பதாகவும் தகவல் அளித்தனர். ஆனால், இப்புதிய மருத்துவமனை பற்றி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் எந்த தகவலும் இல்லை.
