என்.ஐ.டி., விடுதி வளாகத்தில் முட்புதர்களை அகற்ற வேண்டும்
என்.ஐ.டி., விடுதி வளாகத்தில் முட்புதர்களை அகற்ற வேண்டும்
UPDATED : பிப் 04, 2021 12:00 AM
ADDED : பிப் 04, 2021 10:37 AM
காரைக்கால்;
காரைக்காலில் தேசிய தொழில்நுட்ப கழக மாணவிகள் விடுதி வளாகத்தில் மண்டியுள்ள முட்புதர்களை அகற்றி, அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
காரைக்கால், திருவேட்டக்குடி பகுதியில் தேசிய தொழில்நுட்ப கழகம் (என்.ஐ.டி.,) இயங்கி வருகிறது. இங்குள்ள விடுதியில், சென்னை, புதுச்சேரி, அந்தமான் உட்பட பல பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி, படிக்கின்றனர். கொரோனா தொற்று காரணமாக கடந்த 10 மாதங்களாக என்.ஐ.டி., விடுமுறை அளிக்கப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. தற்போது கல்லுாரி திறக்கப்பட்ட நிலையில், கல்லுாரி வந்த மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.விடுதியில் தேவையான கழிவறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் மற்றும் மாணவர்கள் உணவு அருந்த ஒரு கி.மீ., துாரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது.
விடுதியை சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளதால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாணவர்கள் தங்கும் அறைக்குள் விஷ பூச்சி வந்துள்ளது. இதனால் மாணவிகள் அலறி அடித்து வெளியே ஓடியதால் பரபரப்பு நிலவியது.எனவே, மாணவிகள் நலன் கருதி, விடுதி வளாகத்தில் மண்டியுள்ள புதர்களை அப்புறப்படுத்த வேண்டும். விடுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
