பள்ளி செல்லா மற்றும் இடை நின்ற குழந்தைகளுக்கு புதுவாழ்வு
பள்ளி செல்லா மற்றும் இடை நின்ற குழந்தைகளுக்கு புதுவாழ்வு
UPDATED : பிப் 04, 2021 12:00 AM
ADDED : பிப் 04, 2021 10:48 AM
தமிழகத்தில், ஆண்டுதோறும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் புலம்பெயர்ந்த மற்றும் பள்ளி செல்லா இடை நின்ற குழந்தைகளை கண்டறிந்து,சிறப்பு பயிற்சி அளித்து வயதுக்கு ஏற்ற வகுப்புகளில் சேர்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் அடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் சார்பில், 6 முதல், 14 வயது வரை உள்ள இடை நின்ற பள்ளி செல்லா குழந்தைகளுக்கு கல்வி அளிக்க, இணைப்பு சிறப்பு பயிற்சி மையங்கள் மற்றும் உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையங்கள், அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுகின்றன.
இம்மையங்களில் குழந்தைகளுக்கு ஆறு மாதம் முதல் இரண்டாண்டுவரை சிறப்பு பயிற்சி அளித்து, கற்றல் திறனின் அடிப்படையில் தகுந்த வகுப்புகளில் சேர்க்கப்படுகின்றனர். கொரோனா தொற்று காரணமாக, கடந்த ஆண்டில் சிறப்பு பயிற்சி மையங்களை செயல்படுத்த இயலவில்லை. தற்போது உண்டு, உறைவிட பயிற்சி மையங்களில் பணிபுரியும் கல்வியியல் தன்னார்வலர்கள் அன்றாட பணி அடிப்படையில், மாதச்சம்பளம் வழங்கப்படுகிறது. அதோடு பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளுக்கு இணையவழிக் கல்வி அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே அனைத்து உண்டு, உறைவிட சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு, இணையவழி பயிற்சி வாயிலாக, மூன்று பருவத்திற்கான பாடத்திட்டங்களையும், நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, செயல்படுத்தவும், மாவட்ட சிறப்பு பயிற்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் திட்ட அலுவலர் கண்காணித்து தொய்வின்றி நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இணையவழி பயிற்சி சார்ந்த விரிவான அறிக்கை, கால அட்டவணை, இணையவசதி உள்ளதற்கான ஆதாரம் ஆகிய வற்றை மாநில திட்ட இயக்ககத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
வீடியோ வடிவில் பாடங்கள்
பெரியநாயக்கன்பாளையம் வட்டார கல்வி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், "சின்ன தடாகம், பிரஸ் காலனி, கவுண்டம்பாளையம், துடியலுார், நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இடைநின்ற குழந்தைகள் மற்றும் பிற மாவட்ட, மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்த நபர்களை கண்டறிந்து, அவர்களின் குழந்தைகள் பள்ளி செல்கின்றனரா என, கணக்கீடு செய்யும் பணி துவங்கியுள்ளது.
அவர்களைக் கண்டறிந்து, அந்தந்த பகுதியில் உள்ள பள்ளிகளில் சேர்த்து, அவர்களுக்கான அடிப்படை கல்வி &'ஆன்லைன்&' வாயிலாக அளிக்கப்படும். நேரடி இணைய வசதி இல்லாத குழந்தைகளுக்கு வாட்ஸ்ஆப் குரூப் துவங்கி பாடங்களை வீடியோ வடிவில் சேமித்து வழங்கப்படும்" என்றார்.
