நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடி வழக்கு சிங்கப்பூரில் தலைமறைவாக இருந்தவர் கைது
நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடி வழக்கு சிங்கப்பூரில் தலைமறைவாக இருந்தவர் கைது
UPDATED : பிப் 11, 2021 12:00 AM
ADDED : பிப் 11, 2021 04:21 PM
சென்னை:
&'நீட்&' தேர்வு ஆள் மாறாட்ட மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நபர், சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் சென்னை திரும்பியபோது, குடியுரிமை அதிகாரிகளிடம் சிக்கினார்.
நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து, மோசடி செய்தது தொடர்பாக, தேனி சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில், முறைகேடாக தேனி அரசு மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்த, சென்னையைச் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா, இவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் உள்ளிட்ட, 10 பேரை கைது செய்தனர்.
தமிழக மாணவர்களுக்கு பதிலாக, நீட் தேர்வு எழுதிய வட மாநிலங்களைச் சேர்ந்த, இரண்டு பெண்கள் உட்பட, 10 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்களிடம் படங்களையும் வெளியிட்டுள்ளனர். அத்துடன், நீட் தேர்வு மோசடிக்கு மூளையாக செயல்பட்ட, கேரளாவைச் சேர்ந்த ரஷீத், 45, என்பவரை சுற்றி வளைத்தனர்.
போலீசார் தன்னை நெருங்கி விட்டதை அறிந்த ரஷீத், தேனி மாவட்ட நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இவரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, தன்னுடன் புரோக்கராக செயல்பட்ட திருச்சியைச் சேர்ந்த தருண், 26, என்பவர் சிங்கப்பூரில் தலைமறைவாக இருப்பதாக வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து, தருணை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். இவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, அனைத்து விமான நிலையங்கள் மற்றும் குடியுரிமை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு நேற்று காலை, 11:30 மணியளவில், ஏர் இந்தியா சிறப்பு விமானம் வந்தது. இதில், 142 பயணியர் வந்தனர்.
இவர்களின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, தருண் சிக்கினார். அவரை, சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் ஒப்படைத்தனர். தருணை கைது செய்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.
