பிளஸ் 2 தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் பணி தொடக்கம்
பிளஸ் 2 தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் பணி தொடக்கம்
UPDATED : மார் 01, 2021 12:00 AM
ADDED : மார் 01, 2021 08:47 AM
நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் நடக்கிறது. இதையொட்டி கடந்த கல்வியாண்டுகளில் நடந்த தேர்வின் போது சில பாடங்களில் தோல்வியடைந்த தனித்தேர்வர்கள், தற்போது நடைபெற உள்ள பொதுத்தேர்வினை எழுதுவதற்காக, ஆன்லைனில் விண்ணப்பம் செய்யும் பணி நேற்று துவங்கியது. இதற்கான பணிகள் கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் நடக்கிறது.
பழைய பாடத்திட்டத்தில் பயின்று தேர்ச்சி பெறாத மாணவர்கள், தற்போது புதிய பாடத் திட்டத்தில் தேர்வு எழுத அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்திற்கும் தலா 50 ரூபாய் கட்டணத்துடன், ஆன்லைன் பதிவு ரூ.50, இதர கட்டணம் ரூ.35 சேர்த்து தர வேண்டும். மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழுடன் வந்து விண்ணப்பிக்கலாம்.
மார்ச் 6ம் தேதி வரை விண்ணப்பம் செய்யும் பணி நடக்கிறது.இதில் விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள், வரும் 8, 9 ஆகிய தேதிகளில் தட்கலில் விண்ணப்பித்துக்கொள்ளலாம். தட்கலில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் கூடுதலாக 1000 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும்.
