பள்ளி மாணவர்கள் தேர்ச்சி குறித்து அறிவிப்பை வெளியிட வேண்டும்
பள்ளி மாணவர்கள் தேர்ச்சி குறித்து அறிவிப்பை வெளியிட வேண்டும்
UPDATED : மார் 04, 2021 12:00 AM
ADDED : மார் 04, 2021 09:32 AM
காரைக்கால்:
தமிழகத்தை பின்பற்றி, புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி குறித்து கவர்னர் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் கூறி உள்ளார்.
அவரது அறிக்கை:
பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரை, புதுச்சேரி மாநிலத்தில் தமிழகத்தை பின்பற்றியே பாடத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் ஒரு அங்கமாக புதுச்சேரி கல்வித்துறை கடந்த 50 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் சரியான முறையில் இயங்காத நிலையில், 9,10,11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும், தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. ஆனால், புதுச்சேரி மாணவர்களின் நிலை குறித்து கல்வித்துறை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு தேர்வு நடத்தலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இது, புதுச்சேரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக கல்வித்துறையோடு இணைந்த புதுச்சேரி கல்வித்துறை தனியாக ஒரு முடிவை எடுக்க முடியாது. எனவே, கவர்னர் தனது கருத்தை திரும்பப் பெற்று, தமிழக கல்வித்துறையின் முடிவை பின்பற்றி, புதுச்சேரியிலும் 9,10,11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்.
புதுச்சேரி கல்வித்துறை தனியாக வினாத்தாள் தயாரிக்க அதிகாரம் இல்லை. எனவே மாணவர்களின் நலன்கருதி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
