ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு ஏப்., 30க்குள் நடத்த கெடு
ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு ஏப்., 30க்குள் நடத்த கெடு
UPDATED : மார் 12, 2021 12:00 AM
ADDED : மார் 12, 2021 01:04 AM
ராமநாதபுரம் மாவட்டம், கிடாதிருக்கை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஜேக்கப் தாக்கல் செய்த மனு:
தலைமை ஆசிரியர்களுக்கு முதலில் பொது இடமாறுதல் கலந்தாய்வு, பின் பதவி உயர்விற்கான கலந்தாய்வு நடத்துவது வழக்கம். 2020ல் கொரோனா ஊரடங்கால், இடமாறுதல் கலந்தாய்வு நடத்தவில்லை.
2021ல், பொது இடமாறுதல் கலந்தாய்வு மூலம், சொந்த மாவட்டத்திற்கு செல்லும் எதிர்பார்ப்பில் இருந்தேன். அதிர்ச்சியளிக்கும் விதமாக, பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல், பொது பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த, பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டது. பணியில் மூத்த தலைமை ஆசிரியர்கள், நடப்பு கல்வியாண்டில், பொது இடமாறுதல் கவுன்சிலிங்கை எதிர்பார்த்திருந்தனர். அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், அரசின் நடவடிக்கை உள்ளது.
இது சட்டவிரோதம்; விதிமீறல் உள்ளது. உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது பதவி உயர்வு கலந்தாய்விற்கு தடை விதிக்க வேண்டும். பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்திய பின், பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுபோல் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் சிலர் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் உத்தரவு:
துவக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்களுக்கு பொது இடமாறுதல் கலந்தாய்வு, அதைத் தொடர்ந்து பதவி உயர்வு கலந்தாய்வை ஏப்., 30க்குள் நடத்த, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், துவக்கக் கல்வி இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
