விருப்பத்துடன் படிக்க வேண்டும்: பேச்சாளர் கோபிநாத்
விருப்பத்துடன் படிக்க வேண்டும்: பேச்சாளர் கோபிநாத்
UPDATED : நவ 09, 2009 12:00 AM
ADDED : நவ 09, 2009 11:40 AM
சென்னை: “எனக்கு தெரிந்ததை, இந்த சமூகத்திற்கு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் படிப்பது தான் படிப்பு,” என பேச்சாளர் கோபிநாத், மாணவர்கள் மத்தியில் எழுச்சியுடன் பேசினார்.
‘ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சியில், பேச்சாளர் கோபிநாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ‘தன்னம்பிக்கை ’ என்ற தலைப்பில் பேசியதாவது:
வாழ்க்கையில் எல்லாமே பரீட்சையுடன் தொடர்புடையது தான். இதைக் கண்டு பயப்படத் தேவையில்லை. தேர்வு என்பது வாழ்க்கையில் சந்திக்கிற யதார்த்தமான விஷயம். ஆனால் உலக அளவில் தேர்விற்கு, இந்தியர்கள் அதிகம் பயப்படுவதாக தகவல் கூறுகிறது.
தங்களை தேர்வுக்கு உட்படுத்த தயாராகவில்லை என்றால், அவர்களால் இந்த சமூகத்திற்கு பிரயோஜனம் இல்லை. எனவே, தேர்வை சந்திப்பதில் பயம் கூடாது. தேர்வில் மார்க் எடுப்பது மட்டும் படிப்பல்ல. எனக்கு தெரிந்ததை, இந்த சமூகத்திற்கு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் படிக்க வேண்டும்; அது தான் படிப்பு; அதற்காகத் தான் அதிக மார்க் வாங்க வேண்டும்; அதற்காகத் தான் நிறைய சாதிக்கணும். இங்கு கூடியுள்ள கூட்டம் தான், நாளை உலகை ஆளப்போகிறது என்ற உறுதியுடன் படியுங்கள்.
நாம் அணியும் ஆடை, பயன்படுத் தும் பொருட்கள் உள்ளிட்ட எல்லாமே மற்ற நாடுகளின் தயாரிப்புகளாக உள்ளது. நமது தயாரிப்புகள், உலகத் தரத்தில், 80லிருந்து 85 சதவீதத்திற்குள் தான் இருக்கிறது. இதை உயர்த்தும் நோக்கத்துடன் படிக்க வேண்டும். வேலை வாய்ப்பிற்காக, உலக நாடுகளில் இருந்து பலரும், நம் நாட்டிற்கு வர வேண்டும். இவ்வாறு கோபிநாத் பேசினார்.
அடுத்த தலைமுறை...
மாணவர்கள் மத்தியில் கோபிநாத் பேசும் போது, “நீங்கள் எதற்காக படிக்கணும்? எதற்கு அதிக மார்க் வாங்க வேண்டும்? சொல்லுங்கள்..” என்று மாணவ, மாணவியர்களிடையே கேள்வி எழுப்பினார். அவர்களிடம் இருந்து வந்த பதில்கள் அனைவரையும் ஆச்சர்யப் படுத்தியது.
இன்றைக்கு கீழே இருக்கிற நாங்க, நாளைக்கு மேலே வர வேண்டும். எனது சொந்தக் காலில் நிற்கணும். அடுத்த தலைமுறையை நல்லா கொண்டு வரணும். தாய் மற்றும் தாய்நாடு என இரண்டையும் காப்பாற்ற வேண்டும். நாடு முன்னேற என் படிப்பு உதவ வேண்டும் என்று மாணவர்கள் பதில் அளித்தனர்.
