UPDATED : மார் 25, 2021 12:00 AM
ADDED : மார் 25, 2021 03:29 PM
சென்னை:
அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பாவின் பதவிக்காலம் இன்னும், 10 நாட்களில் முடிவதால், அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக உயர்கல்வி துறையின் முக்கிய நிறுவனமான அண்ணா பல்கலையில் துணைவேந்தர் பதவி முக்கியத்துவம் பெற்றதாகவும், கவுரவமாகவும் கருதப்படுகிறது. இந்த பல்கலையில், தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்களே துணைவேந்தராக பதவி வகித்தனர். இந்நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த பேராசிரியர் சுரப்பா, மூன்று ஆண்டுகளுக்கு முன், அண்ணா பல்கலை துணைவேந்தராக பதவியேற்றார்.
விமர்சனம்
அவர் வெளிமாநிலத்தைச்சேர்ந்தவர்; பா.ஜ., ஆதரவாளர் என்றும், அரசியல் கட்சியினர் விமர்சனம் செய்தனர். சுரப்பாவின் நிர்வாக முறைக்கு ஒரு தரப்பில் எதிர்ப்பும், இன்னொரு தரப்பில் வரவேற்பும் உள்ளது.நிர்வாகத்தில் ஊழல் செய்ததாக எழுந்த புகாரில், சுரப்பா மீது, சென்னை போலீசார் பதிவு செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், சுரப்பாவின் பதவிக்காலம், வரும், 5ம் தேதியுடன் முடிகிறது. அதன்பின், புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய வேண்டும். இதற்கான தேடல் குழு அமைப்பு பணிகள் நடக்கின்றன.அரசியல் தலையீடுசுரப்பாவின் பதவிக்காலம் முடிய, 10 நாட்களே உள்ளதால், அவருக்கு பதவி காலம் நீட்டிக்கப்படுமா என, கேள்வி எழுந்து உள்ளது.
அரசின் சார்பில் ஒருங்கிணைப்பு கமிட்டி அமைத்து, உயர்கல்வி செயலரே நேரடியாக நிர்வாகத்தை கவனிக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. அதே நேரம், தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், அரசியல் தலையீடுகளை கடந்து, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், தன் அதிகாரத்தை பயன்படுத்தி, சுரப்பாவின் பதவிக் காலத்தை நீட்டிப்பு செய்யலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
