எங்கே செல்கின்றன நமது நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்
எங்கே செல்கின்றன நமது நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்
UPDATED : நவ 09, 2009 12:00 AM
ADDED : நவ 09, 2009 04:00 PM
இந்த ஆய்வின் முடிவுகள் தொடர்பாக அமைச்சகம் நீண்ட நாட்களாக மவுனம் காத்தது பலவித யூகங்களை எழுப்பியது. 40 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் அவை அப்படி இயங்குவதற்கான தகுதிகளை இழந்திருப்பதே இதற்குக் காரணம் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். இந்த 40 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் பல தனியாரால் நடத்தப்படுகின்றன.
நாட்டில் இயங்கி வரும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 38 பல்கலைக்கழகங்களில் மட்டுமே உள் கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக உள்ளன என்றும் 44 பல்கலைக்கழகங்கள் அவற்றின் அடிப்படை வசதிகளை உடனடியாக மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஆனால் எஞ்சியுள்ள 40க்கும் மேலான கல்வி நிறுவனங்கள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் என்பதற்கான அந்தஸ்தை இழந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதாக இந்த ஆய்வு கூறுகிறது. இந்த 40ல் 3 அரியானாவிலும் உத்தரகண்ட் மற்றும் உ.பி., இவற்றில் தலா 2 உள்ளன.
மீதமுள்ளவற்றில் பெரும்பான்மையான நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ளவை என்பது தான் இதில் முக்கியமான தகவலாக உள்ளது. 3 ஆண்டு கால அவகாசம் கொடுத்தும் இந்த கல்வி நிறுவனங்கள் தங்களை மேம்படுத்திக் கொள்வதற்கான எந்த வித முயற்சியிலும் இறங்கவில்லை என்றே இந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஆனால் மத்திய அரசு இதில் ஏன் மவுனமாக இருக்கிறது என்பது பெரிய புதிராகவே உள்ளதாக கல்வியாளர்கள் கருதுகின்றனர்.
மத்திய அரசின் மவுனத்திற்கு 3 காரணங்கள் கூறப்படுகின்றன. நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தைத் திரும்பப் பெறுவது எளிதான செயலல்ல என்பது முதல் காரணம். பலம் பொருந்திய அரசியல்வாதிகள் இவற்றை நடத்தி வருவதே அடுத்த காரணம். சட்டம் மூலமாகவே யு.ஜி.சி, அந்த அந்தஸ்தை வழங்கியிருப்பதால், சட்டரீதியாக அந்தஸ்தைத் திரும்பப் பெறுவதில் சிரமங்கள் உள்ளன.
இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் திருப்திகரமாக இயங்குவதாக இதே ரீதியான ஆய்வை மேற்கொண்ட யு.ஜி.சி., தெரிவித்திருப்பது தான் மத்திய அரசை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கியிருக்கிறது. டி.ஒ.ஐ., என்ற அமைப்பு கல்வி மையங்கள், கட்டணம், நிர்வாக அமைப்பு போன்ற அம்சங்களில் தனியார் நிகர் நிலைப் பல்கலைக்கழகங்கள் போதுமான கட்டுப்பாடுகளின்றி தன்னிச்சையாக செயல்படுவதாகக் கூறியுள்ளது. இதே அறிக்கையானது உயர்கல்வி என்பது இந்தியாவில் வியாபாரமாக்கப்பட்டு விட்டதாகவும் அதன் கல்வி மற்றும் நிர்வாகப் பணிகளில் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், பங்குதாரர்கள் போன்றோரே பதவி வகிப்பதாகவும் கூறி இந்த நிலை கவலைதரக்கூடியது என்றும் கூறியுள்ளது.
கிட்டத்தட்ட 16 ஆயிரத்து 500 பத்திரிகைகளின் வாயிலாக விமர்சனங்களைப் பெற்று கல்வி நிறுவனங்கள் குறித்த தகவல் களஞ்சியமாகத் திகழும் ஸ்கோபஸ் என்ற அமைப்பானது நாட்டில் இயங்கி வரும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு தனது தரவரிசைப் பட்டியலில் இடமே தரவில்லை. பெரும்பாலான நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் சராசரிக்கும் கீழான கல்வி நிறுவனமாகவே இயங்கி வருவதாக ஸ்கோபஸ் கருதுகிறது. இப்படி ஒரு அமைப்பு இயங்கி வருவதே பெரும்பாலான கல்வி நிறுவனங்களுக்கு தெரியவில்லை என்பது தான் வருந்தத்தக்க உண்மையாகும்.
அரசால் நடத்தப்படும் நிகர்நிலைப்பல்கலைக்கழகங்களும் மோசமாகவே நிர்வகிப்பட்டு வருவதாகவும் ஆய்வு தெரிவித்திருப்பதால் நமது நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை அரசு சரிப்படுத்த முயலும் என்றெலாம் நாம் எப்போதும் நம்ப முடியாது.
