தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அண்ணா பல்கலை மீது சி.பி.ஐ., விசாரணை கோரிய மனு தள்ளுபடி

அண்ணா பல்கலை மீது சி.பி.ஐ., விசாரணை கோரிய மனு தள்ளுபடி

அண்ணா பல்கலை மீது சி.பி.ஐ., விசாரணை கோரிய மனு தள்ளுபடி


UPDATED : நவ 11, 2009 12:00 AM

ADDED : நவ 11, 2009 11:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2009 12:00 AM ADDED : நவ 11, 2009 11:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டிவனம் அரசு கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் பிரபா கல்விமணி என்பவர் தாக்கல் செய்த மனு:
கடந்த 1999ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசு விருப்ப ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் பலர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், முறைகேடு நடந்துள்ளது. போலீஸ் அதிகாரிகளான கூடுதல் டி.ஜி.பி.,க்கள் கே.ராதாகிருஷ்ணன், நரேந்திர பால்சிங் ஆகியோரின் வாரிசுகளுக்கு, 2004, 2005ம் ஆண்டுகளில் அரசு விருப்ப ஒதுக்கீட்டின் கீழ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


மனுவை தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி என்.பால்வசந்தகுமார் அடங்கிய ‘முதல் பெஞ்ச்’ விசாரித்தது. அரசு தரப்பில் அரசு பிளீடர் ராஜாகலிபுல்லா ஆஜரானார். ‘முதல் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு:
அரசு ஒதுக்கீட்டின் கீழ், 2 சதவீத இடங்களை அண்ணா பல்கலைக்கழகம் நிரப்பியுள்ளது. இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ‘இந்த அரசு ஒதுக்கீடு, அரசியலமைப்பு சட்டத்தை மீறியது. 2 சதவீத இடங்களை தகுதி அடிப்படையில், ஒற்றைச் சாளர முறையில் நிரப்பிக் கொள்ளலாம்’ என, ‘டிவிஷன் பெஞ்ச்’ உத்தரவிட்டிருந்தது.


பல்கலைக்கழகம் சிண்டிகேட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத் தில், அனுமதிக்கப்பட்ட மொத்த இடங்களில், அரசு ஒதுக்கீடாக 2 சதவீதம் நிரப்பிக் கொள்ளலாம் என்றும், சராசரியாக 61 இடங்கள் வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது. ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.


கடந்த 2006ம் ஆண்டை பொறுத்தவரை, அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற மூன்று கல்லூரிகளில் மொத்தம் 5,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 2 சதவீதத்தை வைத்துப் பார்த்தால், சராசரியாக 103 மாணவர்கள் வருகின்றனர். அவ்வாறு இருக்கையில், 99ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை, 2 சதவீதத்துக்கு அதிகமாக இல்லை.


ஐகோர்ட் ‘டிவிஷன் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவில், ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களை இடையூறு செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளது. கடந்த 2007-08ம் ஆண்டில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் படிப்பில் தொடரலாம், அதன்பின் வரும் ஆண்டில் ஒதுக்கீடு செய்யக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, 99 முதல் 2006ம் ஆண்டு வரை, அரசு ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் சேர்க்கை நடந்ததை தற்போது ஆராய்வது உகந்தது அல்ல.


போலீஸ் அதிகாரிகள் நரேந்திர பால்சிங், ராதாகிருஷ்ணனின் வாரிசுகள் 2004, 2005ம் ஆண்டில் பொறியியல் படிப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் சில சாதகமான விஷயங்களை செய்து கொடுத்ததால் தான், தங்கள் பிள்ளைகளுக்கு அரசிடம் இந்த இடங்களை பெற்றதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


குற்றச்சாட்டுக்களை கூறுவது எளிது, ஆனால், அதை நிரூபிப்பது கடினம் என ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. வெறும் குற்றச்சாட்டின் அடிப்படையில் எந்த முடிவும் எடுக்க இயலாது. மனுவில் தகுதி இல்லை. தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு ‘முதல் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us