தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழில் பொறியியல் படிப்பு!

தமிழில் பொறியியல் படிப்பு!

தமிழில் பொறியியல் படிப்பு!


UPDATED : மே 29, 2021 12:00 AM

ADDED : மே 29, 2021 12:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 29, 2021 12:00 AM ADDED : மே 29, 2021 12:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சீனா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா போன்ற நாடுகள், பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை தாய் மொழியிலேயே கற்பிக்கின்றன. அனைத்து விதமான நவீன தொழில்நுட்பங்களிலும் அந்த நாடுகள் முன்னணி வகிக்கின்றன. நம் நாட்டில் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட கல்விகள் அனைத்தும் ஆங்கில வழியில் கற்பிக்கப்படுகின்றன. இதனால், தாய் மொழியில் கல்வி பயின்ற கிராமப்புற மாணவர்கள், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் பல சிரமங்களை சந்திக்கின்றனர்.
அச்சம்

பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கூட, பொறியியல் படிப்பில் சோபிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. ஆங்கில மொழியின் மீது உள்ள அச்சத்தின் காரணமாக, பல மாணவர்கள் தொழில்நுட்ப படிப்புகளை புறக்கணிக்கின்றனர்.
இந்நிலையில், ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும், அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், தமிழக மாணவர்களிடையே கருத்து கணிப்பு நடத்தியது. அதில், பொறியியல் படிப்புகளை மாணவர்கள் ஆங்கிலத்தில் கற்க விரும்புகின்றனரா அல்லது தமிழில் கற்க விரும்புகின்றனரா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. 42 சதவீத மாணவர்கள், தமிழிலேயே பொறியியல் படிப்புகளை படிக்க விரும்புவதாக தெரிவித்தனர்.இதையடுத்து, முக்கிய அறிவிப்பு ஒன்றை ஏ.ஐ.சி.டி.இ., வெளியிட்டு உள்ளது.
அனுமதி

அதில், பொறியியல் இளநிலை படிப்புகளை தமிழ், ஹிந்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, குஜராத்தி ஆகிய எட்டு மொழிகளில் கற்பிக்கவும், அந்த மொழியிலேயே தேர்வுகளை எழுதவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ஏ.ஐ.சி.டி.இ.,யின் தலைவர் அனில் சஹஸ்ரபுதே கூறியதாவது:

தொழில்நுட்ப கல்வியை தாய் மொழியில் கற்பதன் வாயிலாக, அதன் அடிப்படைகளை மாணவர்கள் நன்கு கற்று தேர்ச்சி அடைய முடியும். எனவே, தமிழ் உள்ளிட்ட எட்டு பிராந்திய மொழிகளில் இளநிலை பொறியியல் பட்டப்படிப்பை கற்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் எதிர்காலத்தில், 11 பிராந்திய மொழிகளுக்கு இத்திட்டம் விஸ்தரிக்கப்பட உள்ளது. இதற்கு ஆர்வம் தெரிவித்து, 500 கல்வி நிறுவனங்கள் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளன. இத்திட்டம், வரும் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இத்திட்டத்துக்கான அனுமதி உள்ளிட்ட இதர விபரங்கள் குறித்து, ஏ.ஐ.சி.டி.இ.,யின் அனுமதி நடைமுறைகளின் பிரிவு தலைவர் ராஜேந்திரா காக்டே கூறியதாவது:

தாய் மொழியில் தொழில்நுட்ப கல்வி அளிக்கும் இந்த திட்டம், புதிய கல்வி கொள்கையின் கீழ், நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.முதல்கட்டமாக மெக்கானிக்கல், சிவில் மற்றும் எலக்ட்ரிகல்ஸ் பிரிவுகளின் இளநிலை பொறியியல் படிப்புகள் மட்டும் தாய்மொழியில் கற்பிக்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விதிமுறைகள் மிக கடுமையானதாக இருக்கும்.
நிறுவனங்கள் முடிவு

தாய் மொழியில் பொறியியல் படிப்புகளை கற்பிக்க விரும்பும் கல்லுாரிகள், என்.பி.ஏ., எனப்படும், தேசிய அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லுாரியாகவும், மாநிலத்தின் முன்னணி கல்லுாரிகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ள கல்லுாரியாகவும் இருக்க வேண்டும்.
இந்த அளவுகோல்களை பூர்த்தி செய்யும் தன்னாட்சி கல்லுாரிகளுக்கும் அனுமதி வழங்கப்படும். துவக்கத்தில், 30 முதல் 60 மாணவர்களுடன் தாய்மொழி வழி கல்வியை துவங்க வேண்டும். இதற்காக புதிய பேராசிரியர்களை நியமிப்பது அல்லது ஏற்கனவே இருக்கும் பேராசிரியர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களையே இதற்கும் பயன்படுத்துவது குறித்து கல்வி நிறுவனங்கள் முடிவு செய்யலாம். மாணவர்களுக்கு அடிப்படை ஆங்கில அறிவு அவசியம் என்பதால், பாடத் திட்டத்தில் ஆங்கிலமும் ஒரு பாடமாக கட்டாயம் இருக்க வேண்டும்.
மொழிபெயர்ப்பு

ஏ.ஐ.சி.டி.இ.,யின் சொந்த தயாரிப்பான மொழிபெயர்ப்பு மென்பொருள் வாயிலாக, 22 பிராந்திய மொழி பாடப் புத்தகங்களை மொழி பெயர்ப்பு செய்யும் வசதி உள்ளது. அதன் உதவியுடன், பொறியியல் பாடப் புத்தகங்கள் மொழி பெயர்ப்பு செய்யப்படும். அந்தந்த மாநில பேராசிரியர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப அதில் மாற்றங்களை செய்து கொள்ளலாம். தொழில்நுட்ப வார்த்தைகள் மற்றும் சூத்திரங்கள் மொழி மாற்றம் செய்யப்படாது.
பொறியியல் படிப்புக்கான பாடப் புத்தகங்களை தாய்மொழியில் எழுத அல்லது தற்போது உள்ள புத்தகங்களை மொழி மாற்றம் செய்ய, கல்வியாளர்கள் வரவேற்கப்படுகின்றனர். இதற்கு உரிய, &'ராயல்டி&' வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us