தமிழ் வழி கல்வியை கட்டாயமாக்கும் சட்டத்தை இயற்ற வேண்டும்
தமிழ் வழி கல்வியை கட்டாயமாக்கும் சட்டத்தை இயற்ற வேண்டும்
UPDATED : ஜூன் 08, 2021 12:00 AM
ADDED : ஜூன் 08, 2021 12:11 PM
சென்னை:
&'தமிழ் வழி கல்வியை கட்டாயமாக்கி, உடனே சட்டம் இயற்ற வேண்டும்&' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில், தமிழை பயிற்று மொழியாக்க வேண்டும் என்பது, தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களின், 30 ஆண்டு கால கனவு. இக்கனவு மட்டும் கைக்கெட்டாமல், தொடுவானம் போல விலகிச் செல்கிறது. தமிழை பயிற்று மொழியாக்க, எந்த அரசும் முழுமனதுடன், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
தமிழை கட்டாய பயிற்று மொழியாக்கும் சட்டம், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்படுவதையும், தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். மத்திய அரசு சட்டமான, கல்வி பெறும் உரிமை சட்டத்தின், 29 - எப் பிரிவில், நடைமுறைக்கு சாத்தியமாகும் வகையில், தாய்மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்த வாசகத்தில், நடைமுறைக்கு சாத்தியமாகும் வகையில் என்பதை மட்டும் நீக்கி, கல்வி பெறும் உரிமை சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் செய்து, அதற்கு ஜனாதிபதி ஒப்புதலை பெற வேண்டும். இந்த சட்ட திருத்தத்தையும், தமிழை பள்ளி இறுதி வகுப்பு வரை, படிப்படியாக கட்டாய பயிற்று மொழியாக்கும் சட்டத்தையும், சட்டசபையின் முதல் கூட்டத் தொடரில், தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
