UPDATED : ஜூன் 17, 2021 12:00 AM
ADDED : ஜூன் 17, 2021 01:11 PM
சென்னை:
பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்துாரைச் சேர்ந்த, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனு:
கடந்த ஆண்டில், கொரோனா வைரஸ் தொற்றின் முதல் அலை வீசியது. அப்போது, ஊரடங்கு அறிவிப்புக்கு முன், மத்திய - மாநில அரசுகள், பள்ளி தேர்வுகளை நடத்தி முடித்து விட்டன. தமிழக அரசும், பிளஸ் 2 தேர்வை முடித்து விட்டது. அதனால், பிளஸ் 2 மாணவர்களைப் பொறுத்தவரை, மதிப்பெண் பிரச்னை எழவில்லை.
முன்னணி கல்லுாரிகள், பல்கலையில் இடம் கிடைக்க வேண்டும் என்றால், பிளஸ் 2 படிப்பில் எடுக்கும் மதிப்பெண் முக்கியமானது. அதிக மதிப்பெண்கள் பெற்றால் தான், தரம் வாய்ந்த முன்னணி கல்லுாரிகளில் இடம் கிடைக்கும்.மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது, பிளஸ் 2 தேர்வு தான். மாணவர்களின் திறன், கடின உழைப்பை முடிவு செய்வது, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தான். முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்குவது நியாயமற்றது.
பிளஸ் 2 வகுப்பு ஜனவரியில் துவங்கியது. மார்ச் 22ல் பள்ளிகள் மூடப்பட்டன. காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கு &'ஆன்லைன்&' வகுப்புகளும் நடக்கவில்லை.
தேர்வு ரத்து என முடிவு செய்த பின், மதிப்பெண் வழங்குவதற்கு வழி அறிய, குழுவை அரசு நியமித்துள்ளது. எனவே, பிளஸ் 2 தேர்வு ரத்து அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும். இரண்டு மாதங்கள் புத்தாக்க வகுப்புகளை நடத்தி, இறுதி தேர்வும் நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.
