UPDATED : ஜூன் 19, 2021 12:00 AM
ADDED : ஜூன் 19, 2021 01:23 PM
மேலும், மாணவர்களுக்கு மதிப்பெண்வழங்கும் வழிமுறையில், 30:30:40 சதவீதம் என்ற விகிதாசாரத்தை பின்பற்றவும் நீதிபதிகள் அனுமதி அளித்தனர். இதையடுத்து, &'அடுத்த மாதம் 31ம் தேதிக்குள் முடிவுகள் வெளியிடப்படும்&' என, சி.பி.எஸ்.இ., தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் மற்றும் சி.ஐ.எஸ்.சி.இ., எனப்படும் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் ஆகிய பாடத் திட்டத்திற்கான பிளஸ் 2 தேர்வுகளை, கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்தது.
மறுபரிசீலனை
இதையடுத்து, மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவதற்கான வழிமுறையை வகுக்க, நிபுணர் குழுவை மத்திய அரசு நியமித்தது. இந்நிலையில், பிளஸ் 2 தேர்வுகளை ரத்து செய்த உத்தரவை மறுபரிசீலனை செய்யும்படி, மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, &'தற்போது உள்ள நிலையில் தேர்வுகளை நடத்துவது முடியாத காரியம் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. தேர்வு ரத்து செய்யப்பட்ட முடிவை, இந்த நீதிமன்றம் ஏற்கனவே ஏற்றுக் கொண்டுள்ளது. &'எனவே மறுபரிசீலனை என்ற பேச்சுக்கே இடமில்லை&' என, நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவதற்கான வழிமுறை குறித்து, சி.பி.எஸ்.இ., தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
மூன்று பாடங்கள்
அதன் விபரம்:
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு, 10வது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் மொத்தமுள்ள ஐந்து பாடங்களில், அதிக மதிப்பெண் எடுத்த மூன்று பாடங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மேலும் பிளஸ் 2 யூனிட் தேர்வுகள், இடைக்கால தேர்வுகள், மாதிரி பொதுத் தேர்வுகள், கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். செய்முறை தேர்வுகள், உள்ளீட்டு மதிப்பெண்கள் அப்படியே கணக்கில் கொள்ளப்படும்.
அந்த வகையில், 10 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் எடுத்த மதிப்பெண்கள் தலா, 30 சதவீதமும், பிளஸ் 2வில் மாதிரி தேர்வுகள் உள்ளிட்டவற்றில் எடுத்த மதிப்பெண்களில், 40 சதவீதமும் கணக்கிட்டு மதிப்பெண் வழங்கப்படும்.அதாவது, 30:30:40 சதவீதம் என்ற விகிதாசாரத்தின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். இவ்வாறு சி.பி.எஸ்.இ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சி.ஐ.எஸ்.சி.இ., தரப்பில், ஆறாம் வகுப்பில் இருந்து, பிளஸ் 1 வரை, மாணவர்களின் கல்வி திறனின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இரு கல்வி வாரியங்களும் அளித்த மதிப்பெண் வழிமுறைகளை ஏற்றுக் கொண்டு, நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.
தேர்வு எழுத அனுமதி
மேலும் நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:
வாரியம் வழங்கும் மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள், தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட வேண்டும். தொற்று பரவல் கட்டுக்குள் வந்த பின், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, தேர்வுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மதிப்பீடுகள் முடிந்து, முடிவுகள் எப்போது வெளியாகும் என்பதையும், தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு எப்போது தேர்வு நடத்தப்படும் என்பதையும் தெளிவாக தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதை ஏற்றுக் கொண்ட சி.பி.எஸ்.இ., மற்றும் சி.ஐ.எஸ்.சி.இ., தரப்பு, &'அடுத்த மாதம் 31ம் தேதிக்குள் முடிவுகள் வெளியிடப்படும்&' என, உறுதி அளித்தது. வாரியங்கள் சமர்ப்பித்த மதிப்பெண் மதிப்பீட்டு வழிமுறை குறித்து விவாதிக்க விரும்புவதாக, மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் தெரிவித்தார்.இதையடுத்து விசாரணையை, 21ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
குறை தீர்ப்பு நடைமுறை!
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் உத்தரவில் மேலும் கூறியிருப்பதாவது:
சி.பி.எஸ்.இ., மற்றும் சி.ஐ.எஸ்.சி.இ., கல்வி வாரியங்கள் வழங்கும் மதிப்பெண்ணில் திருத்தம் இருந்தாலோ, மாணவர்களுக்கு திருப்தி இல்லாத நிலை ஏற்பட்டாலோ, அந்த குறைகளை கேட்டு, அதை நிவர்த்தி செய்ய, குறை தீர்ப்பு முறைகளையும், மதிப்பீட்டு வழிமுறையில் அங்கமாக சேர்க்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
