UPDATED : ஜூன் 19, 2021 12:00 AM
ADDED : ஜூன் 19, 2021 01:27 PM
&'நீட் தேர்வை இல்லாமல் செய்வோம்&' என, தேர்தல் அறிக்கையில் சொன்ன தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின்னும் அதையே சொல்லிக் கொண்டிருந்தது. தற்போது, அதில் முதல் மாற்றமாக, &'இந்தாண்டு, நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்ய, பயிற்சி வகுப்புகள் தொடரும்&' என, அறிவித்திருக்கிறது.
இது குறித்த, கல்வியாளர்களின் கருத்துக்கள்:
பேராசிரியர் சுப்ரமணியன், இணை வேந்தர், விவேகானந்தா யோகா பல்கலை, மைசூரு:
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுபடியே நீட் தேர்வுக்கான சட்டத்தை மத்திய அரசு இயற்றி இருக்கிறது என, மிகத் தெளிவாக எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும். அதனால், மத்திய அரசு நினைத்தால் கூட நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. நீட் தேர்வை இல்லாமல் செய்வோம் என, யார் சொன்னாலும், அது பொய்யான வாதம் தான்.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில், நீட் இல்லாமல் செய்வோம் என சொல்லி விட்டதாலேயே, ஆட்சிக்கு வந்ததும், அதை நோக்கிய பயணத்திலேயே இருந்தனர். ஆனால், இப்போது முடியாது என, தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொண்டு விட்டனர். அதையடுத்து தான், &'இந்தாண்டு நீட் தேர்வுக்காக, தமிழக மாணவர்களுக்கு பயிற்சி அளிப்போம்&' என, சொல்லி இருக்கின்றனர்.
டாக்டர் காயத்ரி, பேராசிரியை, சவீதா சட்டக் கல்லுாரி:
தி.மு.க., தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வை ரத்து செய்வோம் என சொன்னது, எப்படி என தெரியவில்லை. இப்படி சொல்வதன் மூலம், மருத்துவம் படிக்க விரும்பிய, தமிழ் மாணவர்கள் குழம்பிப் போயினர். நீட் தேர்வு இருக்குமா, இருக்காதா என்று குழப்பத்தில், பல மாணவர்கள் தேர்வுக்கு தயாராகாமல் இருந்து விட்டனர். தமிழக அரசு இப்படியொரு முடிவுக்கு வரும் என்பது, சில காலத்துக்கு முன்பே தெரிந்து விட்டது. தி.மு.க., சார்பில் &'டிவி&' விவாதங்களில் கலந்து கொண்ட வழக்கறிஞர்கள் பரந்தாமனும், தமிழ் மணியும் பேசிய பேச்சுக்கள், அதை உணர்த்தி விட்டன.
பொய் ரொம்ப நாட்களுக்கு நீடிக்காது என சொல்வர். அப்படித்தான், நீட் தொடர்பான, தி.மு.க.,வின் பொய் வாக்குறுதிகள், சீக்கிரத்திலேயே வெளிச்சத்துக்கு வந்து விட்டன. இனியாவது, இந்த விஷயத்தில் குழப்பாமல் இருப்பது நல்லது.
பேராசிரியர்கனகசபாபதி, தமிழக பா.ஜ., துணைத் தலைவர்:
தேர்தலில் ஓட்டு பெறும் நோக்கோடு, நீட் தேர்வை ரத்து செய்வோம் என சொல்லி, ஓட்டு வாங்கினர். இப்போது, உண்மை புரிந்து விட்டது. இனியும் மக்களையும், மாணவர்களையும் ஏமாற்ற முடியாது என தெரிந்ததும், சட்டென பின்வாங்குகின்றனர்.
இந்தாண்டு மாணவர்களை, நீட் தேர்வுக்கு தயாராக பயிற்சி அளிக்கப் போவதாக சொல்கின்றனர். அது, வரவேற்கக் கூடியது தான். அதே நேரம், இந்தாண்டு மட்டும் தான்; அடுத்தாண்டு இல்லாமல் செய்வோம் என்றெல்லாம் கூறி, மக்களை குழப்பக் கூடாது.
நீட் தேர்வை எதிர்கொள்ள, ஒவ்வோர் ஆண்டும் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்போம் என அறிவிக்க வேண்டும். நீட் தேர்வால், சமூக நீதி மறுப்பதாகச் சொல்லும் வாதமும் பொய். அதையும் தி.மு.க., கைவிட வேண்டும். இப்போதாவது உண்மையின் பக்கம், தி.மு.க., வந்தது, நாட்டுக்கு நல்லது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
