ராமச்சந்திரா பள்ளியை மூட பெற்றோர் மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு
ராமச்சந்திரா பள்ளியை மூட பெற்றோர் மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு
UPDATED : ஜூன் 21, 2021 12:00 AM
ADDED : ஜூன் 21, 2021 07:21 PM
சென்னை:
சென்னை, கீழ்ப்பாக்கம், ராமச்சந்திரா பள்ளியை தன்னிச்சையாக மூடும் முடிவுக்கும், பள்ளி நிலத்தை விற்கும் முயற்சிக்கும், மாணவர்கள்,பெற்றோர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து, முதல்வரின் தனி பிரிவுக்கும், கல்வித் துறைக்கும் புகார்கள் குவிந்து வருகின்றன. சென்னை, கீழ்ப்பாக்கம், கார்டன் சாலையில், 1976ல், ஆர்.நாராயணன் அய்யர் என்பவர், &'ருக்மணி நினைவு பள்ளி&'யை துவங்கினார். இந்த பள்ளி தற்போது, &'ராமச்சந்திரா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி&'யாக செயல்படுகிறது.
அதிகாரிகள் பேச்சு
கீழ்ப்பாக்கம், அதன் சுற்றுப்புறத்தை சேர்ந்த, 1,000 மாணவர்கள், இங்கு படித்து வருகின்றனர். 2020 - 21ம் கல்வி ஆண்டில், கொரோனா பெருந்தொற்று காலத்திலும், மாணவர்களிடம் கடுமையாக நடந்தது, கட்டணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், நிதி நெருக்கடி காரணமாக, 2021 - 22ம் கல்வி ஆண்டில் பள்ளியை மூடப்போவதாக, அதன் நிர்வாகம், 2020 மார்ச்சில் அறிவித்தது. அப்போதே மாணவர்கள், பெற்றோர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதையடுத்து, 2020 மார்ச்சில், மாணவர்கள், பெற்றோர் ஒன்று சேர்ந்து, பள்ளி நிர்வாகத்தை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், கல்வித்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அதில், பள்ளியை மூடும் முடிவை கைவிடுவதாக, நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் தற்போது, மாணவர்களின் வீட்டுக்கு சென்று பேச்சு நடத்தி, டி.சி., எனப்படும், மாற்றுச் சான்றிதழ் வழங்கும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளதாக, புகார் எழுந்துள்ளது.
சந்தேகம்
இது குறித்து, பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:
ருக்மணி வித்யாலயா, எப்படி ராமச்சந்திரா பள்ளியாக மாறியது என்றே தெரியவில்லை. இப்படி, இப்பள்ளி யாருக்கு சொந்தம் என்பதே தெரியாமல், பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளதுடன், அதற்கு சொந்தமான, ௨௦௦ கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை விற்கும் முயற்சியும் நடக்கிறது. பள்ளி அமைந்துள்ள, 32 கிரவுண்ட் நிலத்தை, ரியல் எஸ்டேட் திட்டத்துக்கு மாற்ற, இத்தகைய முடிவு எடுக்கப்படுகிறதோ என்ற, சந்தேகம் நிலவுகிறது.
சேர்க்கை நிறுத்தம்
தற்போது, 2021 - 22ம் கல்வி ஆண்டில் இருந்து, இப்பள்ளியை உயர் நிலை பள்ளியாக மாற்றுவதாக கூறி, பிளஸ் 1 வகுப்பு மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது. மற்ற வகுப்பு மாணவர்களை, வேறு பள்ளிக்கு மாற கட்டாயப்படுத்துகின்றனர். இதுகுறித்து, பள்ளிக்கல்வி ஆணையர், மெட்ரிகுலேஷன் பள்ளி இணை இயக்குனர், முதல்வரின் தனி பிரிவு ஆகியவற்றில், புகார்கள் அளித்து இருக்கிறோம். முதல்வரும், பள்ளிக்கல்வி அமைச்சரும் தலையிட்டு, இப்பள்ளி தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
