UPDATED : ஜூன் 26, 2021 12:00 AM
ADDED : ஜூன் 26, 2021 07:02 PM
பெங்களூரு:
கர்நாடகாவில் எஸ்.எஸ்.எல்.சி.,பொதுத் தேர்வுக்கான வழிமுறைகள் குறித்து கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் விளக்கி உள்ளார்.
கர்நாடகாவில் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு ஜூலை மூன்றாவது வாரத்தில் நடத்துவதற்கு அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது.
சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தேர்வறையில் ஒரு மேஜையில் ஒருவர் வீதம் 12 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதுவர். தேர்வு மையப்பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் அல்லது பள்ளி அலுவலர்கள் அனைவருமே முதல் &'டோஸ்&' தடுப்பூசியாவது போட்டிருக்க வேண்டும்.
ஆலோசனை
கல்வித்துறை நோடல் அதிகாரிகளுக்கு தேர்வுக்கான ஏற்பாடுகளை விரைவுப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வின்போது பின்பற்ற வேண்டிய அனைத்து வழிமுறைகள் குறித்தும் அந்தந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் கலெக்டர்கள் தேர்வுக்கான ஏற்பாடுகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வழங்க வேண்டும். அனைத்து தேர்வு மையங்களிலும் மாணவர்கள் தேர்வுக்கு முன்பும், பின்பும் கிருமிநாசினி கொண்டு துாய்மை செய்ய வேண்டும். மையத்தில் சமூக விலகல் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். மாணவர்கள் தண்ணீர் பாட்டில் மற்றும் உணவும் கொண்டு வரலாம். கொரோனா பாதிப்புள்ள மாணவர்கள், கொரோனா சிகிச்சை மையத்திலிருந்து தேர்வு எழுதலாம்.
அவர்கள் சிகிச்சை மையத்துக்கு செல்ல 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்படும். காய்ச்சல், சளி அறிகுறி உள்ள மாணவர்களுக்கென இரண்டு தனி தேர்வறைகள் மையங்களில் ஒதுக்கப்பட வேண்டும். மருத்துவ ஆலோசனை பெற்ற பின் அவர்கள் தேர்வு எழுதலாம். ஆக்சிமீட்டர், தெர்மல் ஸ்கேனர், முதலுதவி பெட்டிகள் மையங்களில் கட்டாயம் இருக்க வேண்டும். முக கவசம் அணியாமல் வரும் மாணவர்களுக்கு, பள்ளியின் சார்பில் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
